முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பல்வேறு கோயில்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மனம் உருக சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலில் வெள்ளித் தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் சீரடி சாய்பாபா பீடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் புதூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கூட்டாத்துப்பட்டி அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மதுரை மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில், ஒத்தக்கடை காளமேகப்பெருமாள் கோயிலில் 1008 சகஸ்ரநாம அச்சனை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு நகரக்கழகம் சார்பில், தாஜ்புரா பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

வேலூர் மேற்கு மாவட்டக்கழக விவசாய அணி சார்பில், ஆம்பூர் நகரிலுள்ள அருள்மிகு சமயவல்லி உடனுறை நாகநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.  கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ரத்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில், பூந்துறை குப்பியண்ண சுவாமி கோவிலில் கோமாதா பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக் கோயிலில் ஆயிரத்து 320 படிகட்டுகளுக்கு மஞ்சள், குங்கும், தேங்காய், வெற்றிலைப் பாக்கு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பாக, அருள்மிகு மாரியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடத்தியும், அங்கப்பிரதட்சனம் செய்தும் தொண்டர்கள் வழிபட்டனர். திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், அப்பாச்சி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தில், ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கூட்டுப் பிராத்தனை செய்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், முதல்வர் ஜெயலலிதா பெயரில், சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளும் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், அரியத்துறை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மரகதவல்லி சமேத வரமூர்த்திஸ்வரர் திருக்கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருகோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயிலில், முருகப்பெருமாணுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடைபெற்றன.

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில், சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள மகான் ஹக்கிம் செய்குதாவூது ஒலியுல்லா தர்க்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பெருந்திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம் பெற வேண்டி வழிபட்டனர். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், குரு சித்தானந்தா கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்