முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி: வடதமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி: வடதமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

சென்னையில் நேற்று முன் தீனம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் வெயிலும் வாட்டி எடுத்தது. மாலை நேரத்தில் இதமான காற்று வீசிக் கொண்டே இருந்தது. மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இரவு 10 மணி அளவில் திடீரென பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரையிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. சில நேரங்களில் பலமாகவும் மழை கொட்டியது.

இதனால் தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10 மணிக்கு பின்னர் வாகனங்களில் வீடு திரும்பியவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.இடி-மின்னலுடன் சூறைகாற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தினர். இடி-மின்னல் காரணமாக பல இடங்களில் டி.வி.க்களும் பழுதானது. மின் தடையும் ஏற்பட்டது. கொடுங்கையூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து மிகவும் அவதிப்பட்டனர்.

இதே போல் சென்னை புறநகர் பகுதிகளான, தாம்பரம், ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர், பூந்தமல்லி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியிலும் கன மழை கொட்டி தீர்த்தது.தாம்பரத்தில் தான் நேற்றிரவு அதிக அளவாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அருகில் உள்ள மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் நீரை ராட்சத மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.

தாம்பரம், முடிச்சூர் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கிருஷ்ணா நகர் முதல் பழைய பெருங்களத்தூர் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.நேற்று  காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சாதகமான சூழ்நிலை காரணமாக வட தமிழகம் மற்றும் புதுசேரியில் சில இடங்களில் கன மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது தென் தமிழகத்தை பொருத்தவரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழைஅளவு வருமாறு:-

தாம்பரம், உத்திரமேரூர் - 11 செ.மீ, கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம் -10 செ.மீ, மயிலாப்பூர், வந்தவாசி-9 செ.மீ, நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம் , மீனம்பாக்கம், விமானநிலையம் , பூந்தமல்லி -8 செ.மீ, கேளம்பாக்கம், மகாபலிபுரம் , மயிலம் -7 செ.மீ, திருவாலங்காடு, ஸ்ரீபெரும்புதூர், குளப்பாக்கம், காட்டுக்குப்பம் -6 செ.மீ, மதுராந்தகம், பூண்டி-5 செ.மீ, திருவள்ளூர், ஆரணி, வானூர், புதுச்சேரி - 4 செ.மீ மழை பெய்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்