முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

76.042 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க டெல்லி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடந்த காவேரி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், 76.042 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கர்நாடகம் தண்ணீரை திறந்துவிட மறுப்பது அரசியல் சாசன உணர்வை வேண்டுமென்றே மீறுவதாகவும் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ் வாசித்தார்.

சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுக்கிணங்க கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் நிர்வாகத் தலைவர்களின் கூட்டத்தை சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுப்படி, மத்திய அரசு கூட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இக்கூட்டத்தில் தாம் கலந்துகொள்ள முடியாததால், தமக்கு பதிலாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரை, தமிழக அதிகாரிகளுடன் தாம் அனுப்பியிருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட்டின் ஒவ்வொரு உத்தரவையும் தமிழ்நாடு ஏற்று, மதித்து நடந்து வருகிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும், சமீபத்திய சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கிணங்க, தமிழ்நாட்டிற்கு நியாயமான காவிரி தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக்கூட்டத்தில் தமிழகம் கலந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இதற்கு மாறாக கர்நாடக அரசு வெறுப்புணர்ச்சியுடன் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகளை உதாசீனப்படுத்துவதாகவும், சுப்ரீம்கோர்ட் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ம் தேதிவரை தமிழ்நாட்டிற்கு 60 புள்ளி ஒன்பது எட்டு மூன்று டி.எம்.சி அடி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அளவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டியுள்ளதாலும், காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிரை காப்பாற்ற வேண்டிய நோக்கம் காரணமாகவும், இடைக்கால உத்தரவுகளைப் பெற உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது. 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் உச்சநீதிமன்றம் முதலில் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் 12-ம் தேதி இந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, 20-ம் தேதிவரை தினமும் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது மொத்தம் 17.366 டி.எம்.சி. அடி தண்ணீர் ஆகும். ஆனால், தேவையான அளவு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு தவறிவிட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி உச்சநீதிமன்றம் தனது உத்தரவை திருத்தி அமைத்து, 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தது. இது மொத்தம் 3.629 டி.எம்.சி. அடி தண்ணீராகும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் மதிக்காததோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்துவிட தவறியதோடு, ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரையும் திறந்துவிட தவறியுள்ளது கர்நாடக அரசு. வேண்டுமென்றே இவ்வாறு புறக்கணிப்பது இந்திய அரசியல் சாசன உணர்வுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தாததோடு, கட்டுக்கடங்காத கும்பல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அனுமதித்தாகவும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்டபடி தண்ணீர் திறந்துவிடாதது மட்டுமின்றி, கடந்த 5-ம் தேதி முதல் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது முதல், கர்நாடகாவில் பிழைப்பைத் தேடிச் சென்றுள்ள ஏழை தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  தமிழர்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் குறிவைத்து திட்டமிட்டு தாக்கப்பட்டன. தமிழ்நாடு பதிவெண்கொண்ட பல வாகனங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் அம்மாநிலத்தில் பயணம் செய்யும்போது அச்சத்துடனே செல்கின்றனர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் வன்முறை கும்பலைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை - பல்வேறு அரசியல் அமைப்புகள் இத்தகைய வன்முறைச் சம்பவங்களை ஊக்குவித்திருப்பதாக நம்பவேண்டியுள்ளது - சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியவர்கள் இத்தகைய சம்பவங்களை களிப்புடன் கவனித்துக்கொண்டிருந்ததாகவும் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு மாறாக, தமது உத்தரவு மற்றும் மேற்பார்வை காரணமாக தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கர்நாடகவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டனர். ஓரிரு சிறு சம்பவங்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விஷமிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு மாறாக கர்நாடகாவில் நிலைமை மோசமாக இருந்தது என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை தமிழக அரசு பெற்றது. இந்த இடைக்கால உத்தரவை மதித்து நடக்காததோடு, 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி அவசர சட்டம் ஒன்றை கர்நாடக அரசு பிறப்பித்தது. இடைக்கால உத்தரவை செல்லாது என்று இந்த அவசர சட்டம் குறிப்பிட்டதோடு, இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில், காவிரி தண்ணீரை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டது. இந்த அவசர சட்டத்தை, இந்திய குடியரசுத் தலைவர், அரசியல் சாசனப் பிரிவு 143 உட்பிரிவு 1-ன் கீழ், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியபோது, இந்த அவசர சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்பதையும் முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1991-ம் ஆண்டு காவேரி நதிநீர் நடுவர்மன்றம் தனது இடைக்கால உத்தரவை பிறப்பித்தபோதே, கர்நாடகாவில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது- அங்கு வாழும் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்கள், சொந்தநாட்டிலேயே அகதிகள் போல வெளியேறவேண்டியதாயிற்று. தமிழ்நாடு எப்போதெல்லாம் தனக்குரிய நதிநீர் பங்கை நீதித்துறை மூலம் கோருகின்றதோ, அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது- தமிழகத்தின் கோரிக்கைகளில் சாராம்சம் இருப்பதாகவும், நியாயம் இருப்பதாகவும் அனைத்து நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன.

காவிரி நடுவர்மன்றத்தின் இடைக்கால உத்தரவினை கர்நாடக அரசு ஒருமுறைகூட செயல்படுத்தவில்லை. அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் தேக்க முடியாத அளவுக்கு உபரிநீர் உற்பத்தியாகும்போதுதான், அந்த தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. 16 ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர், காவிரி நடுவர்மன்றம் தனது இறுதி ஆணையை பிறப்பித்தது. நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு 419 டி.எம்.சி. அடி தண்ணீரை ஒதுக்கீடு செய்ததுடன், இரு மாநில எல்லையில் 192 டி.எம்.சி. அடி தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த தண்ணீர் தமிழகத்திற்கு தேவைப்படும் தண்ணீரைக் காட்டிலும், மிகவும் குறைவானதாகும். ஆனால், கர்நாடக அணைகள் கொள்ளாத அளவுக்கு உபரிநீர் தேங்கும் காலங்களைத் தவிர, எந்த ஆண்டிலும் கர்நாடகம் 192 டி.எம்.சி. அடி தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்கவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

2011-ம் ஆண்டு நான் முதலமைச்சராக பதவியேற்றவுடன், காவிரி நடுவர்மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட தீவிர முயற்சிகளை மேற்கொண்டேன். நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணை 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதன்மூலம், தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்தது. நடுவர்மன்ற ஆணை என்பது உச்சநீதிமன்ற உத்தரவின் அந்தஸ்து பெற்றதாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, அது இந்திய சட்டத்தின் அந்தஸ்தை பெற்றதாகும். காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும்  இதுதொடர்பாக தாம் மத்திய அரசிடம் இடைவிடாமல் பிரச்சினையை எழுப்பி வந்ததாகவும், இந்த பிரச்சினையிலும் உச்சநீதிமன்றம் இம்மாதம் 20-ம் தேதியிலிருந்து 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாட்டுக்கு நீதி வழங்கியுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி நதிநீரை, கர்நாடகம் தனக்கே உரியதாக சொந்தம் கொண்டாடி வருகிறது என்பதை இந்த கூட்டம் கருத்தில் கொள்ளவேண்டும். 1991-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கருத்து கேட்டபோது, உச்சநீதிமன்ற முழு அமர்வு தெரிவித்த கருத்துகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இரு மாநிலங்களிடையே பாயும் நதியின் நீர், அதனால் வளம்பெறும் மாநிலங்களிடையே ஓடினாலும், அந்த தண்ணீர் எந்தவொரு மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. ஓடும் தண்ணீரில் எந்த மாநிலமும் தனி உரிமை கோர முடியாது. அப்படிகோருவதன் மூலம், உரிமையுள்ள மற்ற மாநிலங்களுக்கு அவற்றுக்கான நீர் பங்கினை மறுக்க முடியாது என உச்சநீதிமன்ற முழு அமர்வு அப்போது தெரிவித்திருந்தது. தமிழகம் கீழ் பகுதியில் உள்ள மாநிலமாகும். காவேரி நதியில் தங்குதடையின்றி வரும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் நீண்டகாலமாக பாசன அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கு தண்ணீரை கர்நாடகம் மறுப்பதன் மூலம், தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி முறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தையும், இந்திய அரசையும் பலமுறை கோரியும், அவை செவிமடுக்கப்படவில்லை. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு சென்று நியாயம் பெறுவதைத் தவிர, தமிழ்நாட்டுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. உச்சநீதிமன்றம் தமிழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், நீதித்தன்மையையும் எப்போதுமே உணர்ந்துவந்திருக்கிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதுகூட, உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, காவிரியில் உடனடியாக சிறிது தண்ணீரை திறந்துவிட இடைக்கால நிவாரணமாக உத்தரவுபிறப்பித்துள்ளது. இந்த தண்ணீர் தமிழ்நாடு எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்ற போதிலும், அதைக்கூட கர்நாடக அரசு திறந்துவிடாமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வருகிறது. இருந்தபோதிலும், உச்சநீதிமன்றம் மிகவும் பெருந்தன்மையுடன் இருமாநில அரசுகளின் நிர்வாகத் தலைமைகளை அழைத்து, பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதப்போக்கை கைகொண்டிருப்பதால், இந்த கூட்டத்தினால் உரிய பயன் கிடைக்குமா? என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஒரேவழி, உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து நடக்குமாறு கர்நாடக அரசை நிர்பந்தப்படுத்துவதே ஆகும். உச்சநீதிமன்றத்தின் முன்பாகவும் இம்மாதம் நடைபெற்ற மேற்பார்வைக்குழு கூட்டத்திலும் தமிழ்நாடு தனது கோரிக்கைகளையும், மனுக்களையும் தெளிவாக எடுத்துவைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும் என இந்திய அரசிடம் நான் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும், நடுநிலைமையான தொழில்நுட்பக்குழுவான காவேரி மேலாண்மை வாரியம் நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஏற்படுத்தப்பட்டால்தான், காவேரியால் பயனடையும் மாநிலங்களில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நான் எப்போதுமே நம்பி வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, 4 வார கால அவகாசம் முடியும் வரை காத்திருக்காமல், இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடான இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே, தீர்ப்பளிப்பதற்கு முன்பாக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பாசனத்திற்கு தண்ணீர் மிகவும் தேவையாக இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் கடந்த 5, 12, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளின்படி, கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்ட அளவு தண்ணீரையும், ஏற்கெனவே 26-ம் தேதி நிலவரப்படி, தரப்படவேண்டிய 76.042 டி.எம்.சி. அடி தண்ணீரையும் திறந்துவிட வேண்டும். காவேரி டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா பயிரையாவது காப்பாற்ற இந்த தண்ணீர் அத்தியாவசியமாகும். மேலும், மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆணையின்படி உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்