முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருமாநில கருத்துக்களும் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்று கூறிவிட்டு நழுவிக்கொண்டார் மத்திய அமைச்சர் உமாபாரதி.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோரட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர், இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில நிர்வாகத் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி, கருத்து கேட்டு, வரும் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காவிரி நதிநீர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவேரி தொழில்நுட்பப்பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வாசித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று வழக்கமான பல்லவியை பாடினார். தமிழக முதல்வரின் உரையை தலைமை செயலாளர் ராமமோகனராவ் வாசித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட உமாபாரதி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் இருதரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டது. இருமாநிலங்களின் கருத்துகளும் அட்டர்னி ஜென்ரல் மூலம் சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தரா். சுருக்கமாக சொன்னால் டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் உருப்படியாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்