முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பஞ்சாப் கிராம மக்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் வரையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற்ற  பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜம்மு - காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு  அருகே உள்ள  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, சர்வதேச எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவு வரை உள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தலைமைச் செயலாளர், முதல்வரின் முதன்மை செயலாளர், காவல் துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.  இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பெரோஸ்பூர், பஸிலிகா, அமிர்தசரஸ், தரன் தர்ன், குர்தாஸ்பூர் மற்றும் பதான்கோட் ஆகிய 6 மாவட்டங்கள் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்து வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பாக சிரமம் இல்லாமல் தங்குவதற்காக தற்காலிக முகாம்களை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளை கண்காணிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்