முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் துவங்கியது

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, திருப்பதி பிரம்மோற்சவத்தை யொட்டி திருமலை ஸ்ரீ வெங்கடேச  பெருமாளுக்கு கருட சேவையின் போது சமர்ப்பிக்க 11 அழகிய வெண்பட்டுத்  திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

நேற்று  காலை 10.31 மணிக்கு சென்னை பாரிமுனை பூக்கடை காவல்  நிலையம் அருகே தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னகேசவப் பெருமாள் கோவிலில்  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.  ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபாரதனை காண்பித்து  கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். பிரசாதங்கள் வழங்கி  திருக்குடைகளை தரிசித்தனர்.ஊர்வலத்தில் பஜனை, பிரபந்தக் கோஷ்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி குழுக்களும் பங்கேற்றனர்.   திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக சமர்ப்பிக்கப்படும் பாரம்பரியமிக்க திருக்குடைகள். திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடம் எல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில்  நேற்று காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்தது. மாலை  கவுனியை வந்தடைந்தது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டாரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது.

இன்று  (2–-ந் தேதி) ஐ.சி.எப், ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. நாளை  3-ந் தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது.

4–-ந் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. 5–-ந் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து, 6–-ந் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படு கிறது  என்று இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்