முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவேகவுடா உண்ணாவிரதம் சட்ட விரோதம்: திருநாவுக்கரசர்- ஜி.கே.வாசன் கண்டனம்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, ஒரு முன்னாள் பிரதமர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது சட்ட விரோதமாகும் என்று திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உண்ணாவிரதம் இருப்பது கண்டிக்கத்தக்கது.ஒரு முன்னாள் பிரதமர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது சட்ட விரோதமாகும். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேச வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தி.மு.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்பட்ட மாவட்டங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா திடீரென்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்பது அவர் வகித்த மிகப்பெரிய பொறுப்பிற்கு ஏற்புடையதல்ல. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கே சவால் விடுகின்ற செயலாக இது கருதப்படும்.காவிரி பிரச்சினையை கர்நாடக அரசியல் தலைவர்கள் அரசியலாக்கக்கூடாது. கர்நாடக மாநில அரசு சட்டத்தை மதிக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடாது. இரு மாநில மக்களுடைய நல்லுறவை பேணிக் காக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்