முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் பதட்டத்தை தணிக்க இந்தியா -பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: பான் கி மூன் அறிவிப்பு

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

ஐநா : அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க மத்தியஸ்தராக செயல்பட தயராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தலைவர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, காஷ்மீரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டினர். இதுகுறித்து ராணுவ உளவுப்பிரிவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. அந்த தகவலைப்பெற்ற மத்திய அரசு, ராணுவம் நடவடிக்கை எடுத்து, அந்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க அனுமதி அளித்தது.

அதன்பேரில் ராணுவ அதிரடிப்பிரிவு கமாண்டோக்கள் அங்கு சென்று, 28–ம் தேதி நள்ளிரவு தொடங்கி 29–ம்  தேதி அதிகாலை வரை பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை அதிரடியாக நடத்தினர். இதில் 38 பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். 7 பயங்கரவாத முகாம்கள் அழித்து, நிர்மூலமாக்கப்பட்டன.  இந்த தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதத்தில் நமது நாட்டின் முக்கிய நகரங்களில் நாசவேலைகளில் ஈடுபடுமாறு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு முகமைகள் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினருடன், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,இரு நாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் அணு ஆயுத பலம் கொண்ட இருநாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க மத்தியஸ்தராக செயல்பட தயராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் பான் கீ முன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பிறகு  இருநாடுகளிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது கவலை அளிக்கிறது. இருநடுகளும் ஒப்புக்கொண்டால், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தராக செயல்பட ஐநா அதிகாரிகள் தயாராக உள்ளனர். இருநாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். பதட்டத்தை தணிக்க தேவையான உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்