முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற டிரம்ப் திடீர் முயற்சி

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

நியூஜெர்சி  - அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்துத்துவாவை ஆதரித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். நியூஜெர்சியில் "குடியரசு இந்து கூட்டணி" என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே டிரம்ப் பேசியதாவது: எனது தலைமையிலான நிர்வாகத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக போகிறோம். நாம் இருவரும் ஒரு தனி எதிர்காலத்தை பெறப் போகிறோம். நான் இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன். நான் அதிபரானால் இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினர் வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பரை பெற முடியும்.

பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்து உள்ளேன். அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் பங்கு மகத்தானது. குறிப்பாக தொழில் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய சமூகத்தினர் கண்டுள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் உள்ள நெருங்கிய நட்புநாடாக விளங்கும் இந்தியாவை பாராட்டுகிறோம். ஆனால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி இப்படியான வார்த்தைகளை ஏன் பயன்படுத்தவில்லை?

இந்தியா மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து உள்ளது. நான் விரும்பும் மும்பை நகரம் மீதான தாக்குதலானது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. இவ்வாறு டிரம்ப் பேசினார். டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு எதிராக அரங்கத்துக்கு வெளியே இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதே டிரம்ப்தான் நான் பதவி ஏற்றால் அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களையும், வெளிநாட்டினரையும், வந்தேறிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன் என்றும் அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறும் வகையில் இந்தியா, இந்துக்கள் என பேசியிருக்கிறார் டிரம்ப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்