முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பாரமுல்லாவில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் 44 பேர் கைது

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீர், பாரமுல்லாவில் ராணுவத்தினர், போலீஸ் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கோபம் அடைந்து உள்ள லஷ்கர் பயங்கரவாத இயக்கம் பாரமுல்லா போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து உள்ளது.

காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் உள்ள பழமையான நகரங்களில் ராணுவம், போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை போலீசார் ஆகியோர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சுமார் 700 வீடுகளில் அவர்கள் 12 மணி நேரம் சோதனை நடத்தினார்கள். அப்போது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த வீடுகளில் இருந்து சீனா மற்றும் பாகிஸ்தான் கொடிகள், பெட்ரோல் குண்டுகள், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இயக்க லெட்டர் பேடுகள், அங்கீகாரமற்ற செல்போன்கள், தேசவிரோத நோட்டீசுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தில் சீன கொடிகள் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. ஏராளமான பதுங்குகுழிகளும் அழிக்கப்பட்டன. பெருமளவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத படையின் பதுங்குமிடங்களே அழிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

சோதனையின் போது உள்ளூர் மக்கள் வீட்டில் பத்திரமாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக முன்கூட்டியே மக்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களில் சிலர், பெல்லட் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் மற்றும் போலீசுக்கு எதிராக கற்களை வீசியவர்களை அடையாளம் காணவே இந்நடவடிக்கை என்று குற்றம் சாட்டிஉள்ளனர். ஆனால் போலீஸ் இதனை மறுத்து உள்ளது, பயங்கரவாதிகளை பிடிக்கவே இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாரமுல்லா போலீஸ் எஸ்.பி இம்தியாஸ் ஹூசைன் மிர் பேசுகையில், “பயங்கரவாதிகள் இப்பகுதியில் தலைமறைவாக உள்ளனர் என்று எங்களுக்கு தகவல் வந்தது. இப்பகுதியில் மறைந்து இருந்த சில ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளை பிடிக்கவே நடவடிக்கையை மேற்கொண்டோம்,” என்று கூறினார். பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையினால் கோபம் அடைந்து உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் பாராமுல்லா போலீஸ் அதிகாரிக்கு இப்போது மிரட்டல் விடுத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்