முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு வீரர்களுடன் விண்வெளிக்கு சென்ற சீனாவின் விண்கலம் ஆய்வு கூடத்துடன் இணைந்தது

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

பீஜிங் : சீனா இரண்டு விண்வெளி வீரர்களுடன் கடந்த 17-ம் தேதி விண்ணில் செலுத்திய ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் நேற்று டியாங்காங் 2’ ஆய்வு கூடத்துடன் இணைந்தது.

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து, ‘ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது. இதன்படி, கடந்த 17-ம் தேதி காலை 7.30 மணியளவில் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள ஜிக்குவான் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விண்கலத்தில் சீன விண்வெளி ஆய்வாளர்களான ஜிங் ஹெய்பெங்(50), சென் டாங்(37) ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருநாள் பயணத்துக்கு பின்னர் நேற்று அதிகாலை ஒருமணி அளவில் ‘டியாங்காங் 2’ ஆய்வு கூடத்துடன் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் இணைந்தது. அதில் சென்ற இரு விஞ்ஞானிகளும் ‘டியாங்காங் 2’ ஆய்வு கூடத்துக்குள் நுழையும் காட்சியை சீன தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

பூமியின் மேலே சுமார் 393 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘டியாங்காங் 2’ ஆய்வுகூடத்தில் இவர்கள் 30 நாள் தங்கியிருந்து அங்கு பயிர் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தவுள்ளனர். எனவே, சீன விண்வெளித்துறை வரலாற்றில் மிக நீண்டகால ஆய்வாக இது கருதப்படுகிறது. இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ஆய்வு மையம் நிர்மானிக்கப்பட்டால், ரஷியாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை நிலைநாட்டிய பெருமை சீனாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்