முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை: முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ நிபுணர் குழுவினரும், முதல்வரின் உடல்நிலையையும், சிகிச்சையையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். முதல்வர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், மிகவிரைவில் பூரண உடல்நலத்துடன் வீடுதிரும்பி, மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை முன்பு அவர் கூறியதாவது:-

அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உதவியுடன், முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார். தனது வாழ்க்கை முழுக்க தமிழக மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தவர் முதல்வர் ஜெயலலிதா.

தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் ஓய்வில் மட்டும்தான் உள்ளார். அவர் தற்போது முழுக்க குணமடைந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பிய பிறகு மேலும் பல நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார்.  இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான ஹெச்.வி.ஹண்டே, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பிவிடுவார் என ஹண்டே தெரிவித்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் தேறிவருவதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி கழகப் பணிகளையும், அரசுப் பணிகளையும் மேற்கொள்வார் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தொழுகைகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சென்னை தங்க சாலையில் இருந்து ராயபுரம், வண்ணாரப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வழியாக கழகத்தினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பச்சை வண்ண ஆடை உடுத்தி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு, பாதயாத்திரையாகச் சென்றனர். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, மனமுருக சிறப்பு வழிபாடு நடத்தினர்.  தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில், சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாபன் சுவாமி ஆலயத்தில், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.

இதேபோல், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திலும் தங்கத் தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.  பெரம்பலூர் ஒன்றியக் கழகம் சார்பில், ஆவின் பாலகம் அருகே அமைந்துள்ள சித்தர் கோயிலில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மதனகோபால சுவாமி கோயிலில் பாலாபிஷேம் செய்து வழிபாடு செய்தனர்.

கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இளமங்கலம் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.  கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி திருக்கோயிலில் மூலிகை பொருட்கள் மற்றும் பழங்களைக் கொண்டு ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பரங்கிமலை ஒன்றியக் கழகம் சார்பில், மேடவாக்கம் வினை தீர்க்கும் வேலவர் திருக்கோயிலில் விநாயகருக்கு தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர அ.தி.மு.க. சார்பில், கவுண்டம்பட்டி, மேட்டுத்தெரு, வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கணபதி ஹோமம், ஆயுஸ் ஹோமம் உட்பட 6 வகையான ஹோம வழிபாடுகள் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், காரத்தொழுவில் உள்ள அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.  திண்டுக்கல்லில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 108 நன்மைதரும் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் விளக்கு பூஜை செய்தும் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்டம் பட்டீஸ்வரம் ஊராட்சிக் கழகம் சார்பில், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கலிட்டு, நெய்தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், ஸ்ரீபெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும் பொங்கல் வைத்தும் அ.இ.அ.தி.மு.க.வினர் வழிபட்டனர்.  தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில், 108 மூலிகைகளைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை சோழவந்தான் நகர அ.தி.மு.க. சார்பில், பரளயநாத சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள ராஜ கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.  வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சி.எஸ்.ஐ. மத்திய பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் செய்து கழககத்தினர் மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.  நீலகிரி மாவட்டம், உதகை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், உதகை பாறை முனிஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றன.

நாகை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஸ்ரீவித்யா மஹாமேரு பீடத்தில் நடைபெற்று வந்த யாகத்தின் 5-வது மற்றும் இறுதி நாளான நேற்று, 336 வகையான மூலிகைகள், 60 வகையான பழங்கள், 500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு பூர்ணாகுதி நடைபெற்றது. 2,500 பேருக்கு புடவைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில், திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை ஒன்றியக்கழகம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டு மனமுருக வேண்டினர்.  திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மன்னார்குடி மனவளக்கலை மன்றத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று குத்து விளக்கேற்றியும், 108 முறை மந்திரங்களை உச்சரித்தும் மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், மன்னார்குடி வேதாந்திரி மகரிசி கோயிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு சார்பில், எண்ணூரில் உள்ள சிவா விஷ்ணு திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  ஈரோடு புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், பெருந்துறை ஸ்ரீவரசக்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், கள்ளிக்கோட்டை அரசன்மகன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago