முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு அமைப்புகளில் சூரிய ஒளி மின்சாரம்: வல்லுனர் குழு அமைக்க அமைச்சர் அறிவுரை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : கூட்டுறவு அமைப்புகளில் சூரிய ஒளி மின்சாரம் அமைப்பது குறித்து வல்லுனர் குழு அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் 5 கிளைகளில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவும் பணியினை ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இப்பணிகளை விரைந்து முடிக்கவும், கூட்டுறவு அமைப்புகளில் சூரிய ஒளி சக்தி மின்சாரம் அமைப்பது குறித்து ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்யவும் உயர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் பொருட்டு, நடப்பாண்டில் ரூ. 6,000 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 15-ம் தேதி வரை 2,05,706  விவசாயிகளுக்கு ரூ.1345.33 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 22,205 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.119.90 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடன் தள்ளுபடி பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் உடனுக்குடன் பயிர்க்கடன்கள் வழங்கவும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூஅலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்