முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழை எச்சரிக்கை எதிரொலி: வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவ மழை எச்சரிக்கை தொடர்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மேற்கொள்ள வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பொதுப்பணி, நெடுஞ்சாலைகள்மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை வட்டத்திற்குட்பட்ட பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களில் துவங்க உள்ள நிலையில், பொதுப்பணித் துறையின் சென்னை மண்டலத்தில் நடைபெற்று வரும் திட்டபணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முக்கியமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொசஸ் தலையாறு, கூவம், அடையாறு, பள்ளிக்கரனை சதுப்புநிலம் மற்றும் பக்கிம்காம் கால்வாய் ஆகிய நீர்வழித் தடங்களில் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் ஏற்பட்ட உடைப்புகள் சரிசெய்யப்பட்டது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அண்மையில் ரூ. 10 கோடி செலவில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் சென்னை மாவட்டத்தில் 21 பணிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பணிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பணிகள் ஆகியவற்றின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ரூ. 6.38 கோடி மதிப்பீட்டில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓடும் அடையாறு நீர் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் மண் திட்டுகளை அகற்றி வெள்ளநீர் விரைவாக வழிந்தோடும் வகையில் 52 சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை குறித்தும் ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கும்படி அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவுறித்தினார்.

கடலூர்  மாவட்டத்தில் ரூ.7 கோடிமதிப்பீட்டில் வெள்ளம் விரைவாக வழிந்தோடும் வகையில் கீழ்பரவனாறு - மத்திய பரவனாறு இணைப்பு கால்வாய் புதிதாக அமைக்கும் பணிகள் குறித்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலமாக கடலூர் மாவட்டம் செங்கால் ஓடையின் நீளத்தை அகலப்படுத்தி தூர்வாரி கரைகள் சீரமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் தேர்வாய் கண்டிகை கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டப் பணிகளில் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மேற்கூறிய பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்திட அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், வெள்ள காலங்களில் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட அறிவுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்