முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடினின் கைப்பாவை ட்ரம்ப் :நேரடி விவாதத்தில் ஹிலாரி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ரஷ்ய அதிபர் புடினின் கைப்பாவையாக ட்ரம்ப் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி நேரடி விவாதம் லாஸ் வெகாஸ் நகரில் நடந்தது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிறிஸ் வாலேஸ் நெறியாளராகச் செயல்பட்ட இந்த நேரடி விவாதத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

மின்னஞ்சல் விவகாரம், கிளின்டன் அறக்கட்டளை போன்றவை மூலம் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கு‌ற்றம்சாட்டினார். மனித உரிமைகளை மீறும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, பெண்கள் உரிமை தொடர்பாக ஹிலரி பேசி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

அமெரிக்க இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து தகவல்களைத் திருடியதின் பின்னணியில் உள்ள ரஷ்யாவுக்கு ட்ரம்ப் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருவதாக ஹிலாரி குற்றஞ்சாட்டினார். மேலும், ரஷ்ய அதிபர் புதினின் கைப்பாவையாக ட்ரம்ப் செயல்படுவதாகவும் ஹிலாரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ட்ரம்ப், ஒபாமா மற்றும் ஹிலாரியை விட புதின், தனக்கு மரியாதை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த ட்ரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் புனையப்பட்டவை என்று விளக்கமளித்தார். மேலும், தன்னைப் போல பெண்களை மதிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். அவரின் இந்த பதிலை ஹிலாரி கடுமையாக விமர்சித்தார்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள் என்ற வாதத்தினை ட்ரம்ப் எடுத்து வைத்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஹிலாரி, கட்டுப்பாடற்ற துப்பாக்கி கலாசாரத்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். வெளியுறவுக் கொள்கை, குடியேற்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். விவாதத்தின் தொடக்கத்தின் போதும், இறுதியிலும் ஹிலரி-ட்ரம்ப் இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 8-ஆம் தேதி நடக்கிறது. கருத்துக் கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்