முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 6 ரன்னில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லியில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று பகல்-இரவு போட்டியாக நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

முன்னதாக, இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டவுக் பிரெஸ்வெல், ஜிம்மி நீசம், இஷ் சோதி ஆகியோர் நீக்கப்பட்டு ட்ரெண்ட் பவுல்ட், மாட் ஹென்றி, மற்றும் அண்டன் டேவ்சிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ரஹானே, ரோகித் சர்மா, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், பும்ரா.
நியூசிலாந்து: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், ஆண்டன் டேவ்சிக், லூக் ரோஞ்சி, மிட்செல் சண்டனர், டி சவுதி, மட் ஹென்றி, டிரவுண்ட் பவுல்ட்.
கப்தில், லாதம் ஜோடி களத்தில் இறங்கியது. நியூசிலாந்து வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், கப்தில், முதல் ஓவரின் 2-வது பந்தில், யாதவ் வீசிய பந்தில் கிளீன் பெளல்டு ஆனார். பின் களமிறங்கிய நியூசி. அணி கேப்டன் வில்லியம்ஸன், லாதம் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய லாதம், 20.3. ஓவரில் ஜாதவ் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். 46 பந்துகளில் அவர் 46 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். நியூசிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகிய நிலையில், வில்லியம்ஸன் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். சிறப்பாக ஆடிய அவர் 128 பந்துகளை எதிர்கொண்ட அவர், 118 ரன்கள் எடுத்தார். இதில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ராக், மிஷ்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாதவ், படேல், ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்றதைப் போல இந்த போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில், களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷர்மா, ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7.1 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்மா போல்ட் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 21 ஆக இருந்தது. பின் ரகானேவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். பின் ரகானே 28 ரன்களுடனும், பாண்டே 19 ரன்களுடனும், ஜாதவ் 41 ரன்களுடனும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 31.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சில் திணறிய இந்திய வீரர்களில் கேப்டன் டோனி மட்டும் சற்று தாக்கு பிடித்து ஆடி 39 ரன்களை எடுத்தார். அவர்  சோத்தி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் படேல், மிஷ்ரா சொற்ப ரன்னில் அவுட்டாக 40.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் போக்கை மாற்றும் வண்ணம் பாண்ட்யா, யாதவ் சிறப்பாக ஆடினர்.  இதேநிலை நீடித்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் ஆவோலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், பாண்ட்யா, போல்ட் வீசிய பந்தை அடித்தார். ஆனால் நியூசி. வீரர் சாண்ட்னர் லாவகமாக பந்தை கேட்ச் செய்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி கேள்விகுறியானது. அடுத்து வந்த பும்ராக், சோத்தி வீசிய முதல் பந்திலேயே பெளல்ட் ஆகி நியூசிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டும் எடுத்ததால் நியூசிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இது நியூசிலாந்து அணிக்கு இந்த தொடரில் கிடைக்கும் முதல் வெற்றியாகும். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசி சோத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்