முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக பேசி வருகிறார் என அப்பல்லோ  மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதியன்று காய்ச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு, சுவாச ஆதரவு, நோய் தொற்றுத்துறை மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பியாலே சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த சர்வதேச மருத்துவ நிபுணருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் படி மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தன. இதனால் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் வார்டிற்கு தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவ் சென்று பார்த்தார். அப்போது அவர் கூடை நிறைய பழங்களை அளித்து, முதல்வர் விரைவாக குணமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அவரது உடல் நிலை முன்னேற்றத்திற்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கும் கவர்னர் தனது நன்றியை தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள, நாட்டின் முதன்மை மருத்துவ அறிவியல் கல்வி இன்ஸ்ட்டியூட்டின் (எய்ம்ஸ்) மருத்துவ நிபுணர்கள் குழு சென்னை வந்தது. அந்த மருத்துவக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை விவரங்களை பார்த்தனர். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் நல்லமுறையில் இருப்பதாக தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் முதல்வருக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகளை தொடரவும் ஆலோசனை கூறினார்கள்.

மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில், முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதை மருத்துவமனைக்கு சென்று வந்த அரசியல் தலைவர்களான பா.ஜ.க தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண்ஜெட்லி,  காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி  ஆகியோர் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பிரதமர் மோடி பூங்கொத்துக்களை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தநிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு (வெள்ளி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சுவாச ஆதரவு, பிசியோ தெரபி போன்றவை அளிக்கப்படுகின்றன. அப்பல்லோ மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர்கள், மூத்த சுவாச மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்று துறையின் மூத்த மருத்துவ நிபுணர்கள், மூத்த அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணர், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், ஆகியோரைக்கொண்ட பிரதான முக்கிய மருத்துவக்குழு முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகியவற்றை உணவு ஆலோசனை குழுவினரின் மூத்த ஆலோசகர்கள் அளித்து வருகிறார்கள். முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது நன்றாக பேசி வருகிறார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவை இயக்குனர் டாக்டர் என்.சத்யபாமா நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்