முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் உடல்நிலை முன்னேற்றம் : அப்பல்லோ வார்டுக்கு சென்று விசாரித்து கவர்னர் அறிக்கை

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, கவர்னர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, தமிழக கவர்னர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், நேற்று காலையில் 11.30 மணியளவில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, கவர்னருக்கு விரிவாக எடுத்துரைத்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக்குழு அளித்து வரும் சிகிச்சை குறித்து டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கவர்னரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தொடர்ந்து சுவாசம் மற்றும் ஃபிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, கவர்னரிடம் விவரித்தார். முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருவதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கவர்னரிடம் தெரிவித்தார்.

கவர்னர் வித்யாசகர் ராவ், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரடியாக சென்று பார்த்ததாகவும், முதல்வர் நல்ல குணமடைந்து வருவது அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழுவுக்கு, கவர்னர் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த கவர்னரை, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் M. தம்பிதுரை, நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் P. தங்கமணி, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் S.P. வேலுமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் டாக்டர் P ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் J. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. லண்டன் டாக்டர் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வரை முதல்வருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

அதன்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவருக்கு பிசியோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதல்வர் நன்றாக பேசி வருவதாகவும் ஊட்டச்சத்துடன் கூடிய சிறப்பான உணவு அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில்தான் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் 2-வது முறையாக அப்பல்லோ சென்று டாக்டர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்