முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அடிப்படைக்கே ஆபத்தானவர் ட்ரம்ப் : ஒபாமா மனைவி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவின் அடிப்படை கொள்கைகளுக்கே ட்ரம்ப் மிகவும் ஆபத்து விளைவிக்கிறார் என்று ஒபாமா மனைவி மிஷல் சாடியுள்ளார்.  பெண்களை பொழுதுபோக்கு பொருளாக பார்க்கும் எண்ணம் கொண்ட அவர், அவர்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என்பதை உணரத் தவறிவிட்டார். அவர் வளர்ந்து வந்த சூழலில், சாமானிய மக்களைப் பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் சாமானிய மக்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

லத்தீன் இன மக்களைப் பற்றியும் அவர் அறிந்து இருக்க வில்லை. அதனால் தான் அவர்களை குற்றவாளிகள் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.ட்ரம்ப் அதிபர் ஆனால் நாடு தாங்காது. அமெரிக்காவின் அடிப்படையையே சீரழித்து விடுவார் என்று மிஷல் ஒபாமா கடுமையாக தாக்கினார்.பெர்னி சாண்டர்ஸும் ஃபீனிக்ஸ் நகரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இருவரும் அரிசோனாவில் புதிய லத்தீன் வாக்காளர்களையும், மில்லியனியம் வாக்காளர்களையும் குறிவைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரிசோனாவில் உள்ள தன்னார்வ அமைப்புகள் ஏராளமான புதிய லத்தீன் வாக்காளர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.மில்லியனியம் வாக்காளர்களுக்கு ட்ரம்ப் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த சாதகங்களை உணர்ந்த ஹிலரி தரப்பு, மிஷல் ஒபாமாவையும், பெர்னி சான்டர்ஸையும் களப்பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மில்லியன் கணக்கில் டாலர்கள், விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் விளம்பர நேரம் வாங்கப்பட்டுள்ளது.

கடைசி நேர முயற்சி என்றாலும், குடியரசுக் கட்சியின் கோட்டையான அரிசோனாவை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி விட துடிக்கிறது. ஜார்ஜியாவிலும் டெக்சாஸிலும் முதலில் கவனம் செலுத்தியவர்கள், தற்போது அரிசோனாவை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர்.அரிசோனா வெற்றி ஹிலரிக்கு காங்கிரஸ் சபையில் குடியரசுக்கட்சியினரை நிர்பந்தம் செய்து, இணைந்து செயல்பட உதவியாக இருக்கும். குடியரசுக் கட்சிக்கு கடும் பின்னடைவாக அமையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்