முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விண்வெளி ஆய்வின் மகத்தான சாதனைக்கு வயது 8

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல் கல்லாக கருதப்படும் சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட 8 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரன், பூமியிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவிலுள்ளது. அங்கு மனிதர் வாழ உகந்த சூழல் உள்ளதா, குறிப்பாக காற்றும், தண்ணீரும் உள்ளதா என்பது குறித்து அமெரிக்கா, ரஷ்யா ஆகிய, முன்னேறிய நாடுகள் ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தனது விண்வெளி ஆய்வு குறித்து அமெரிக்காவும் பெருமைப்பட்டுக் கொண்டது. இந்நிலையில், சந்திரனை ஆராயும் திட்டத்தில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்தது, உலக நாடுகளை மூக்கின் மீது விரலை சுட்ட செய்தது. சந்திரனுக்கு ஒரு பயணம்.. என்பதுதான் சந்திராயன் பெயரின் பொருள்.இந்த ஆய்வு மொத்தம், மூன்று படிநிலைகள் கொண்டது. முதல்நிலை 2008ம் ஆண்டு நிறைவடைந்தது. 2008ம் ஆண்டு, அக்டோபர் மாதம், இதே தேதி, அதாவது 22ல், சந்திரயான் -1 என்ற 1380 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தாங்கியபடி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணுக்கு சீறி பாய்ந்தது.

3,84,400 கி.மீ. தொலைவிலுள்ள சந்திரனை நெருங்கிய அந்த ராக்கெட் நிலவின் சுற்றுப்பாதையில் ஆராய்ச்சிச் செயற்கைக்கோளை அதே ஆண்டு நவம்பர் 8-ல் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. நிலவுக்கு அனுப்பிய ஆளில்லாத செயற்கைக்கோளான சந்திராயன், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது.சந்திரனின் ஈர்ப்பு விசை, பூமியின் ஈர்ப்பு விசை, சூரிய மண்டலத்தின் இடையூறுகள் உள்ளிட்ட அனைத்தையும் கணித்து, மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் மட்டுமே, முதல் முயற்சியிலேயே இதனைச் சாதிக்க முடியும். அதனைச் செய்ததன் மூலமாக, உலக விஞ்ஞானிகளுக்கு சவால்விடுத்தனர் இந்திய விஞ்ஞானிகள்.

சந்திரயானிலுள்ள 11 கருவிகள் மூலமாக, நிலவின் கதிரியக்கம், நீர்நிலைகள், தனிமங்கள், பருவநிலை உள்ளிட்டவை ஆராயப்படுகின்றன.இதன் அடுத்தகட்டம், ரஷ்ய உதவியுடன் கூடிய, 2018ல் அனுப்பப்பட உள்ள சந்திரயான் -2 ஆகும். அது நிலவின் மேற்பரப்பில் இறங்கி அதிலிருந்து கல், மண், தாதுக்களை வெட்டி எடுத்து வரும் திறன் கொண்டதாக இருக்கும். நிலவில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை எப்பகுதியில் அமைப்பது என்பதையும் சந்திரயான் -2 தீர்மானிக்கும்.இதன் அடுத்த கட்டத்தில், சந்திராயன் -3 ஏவப்பட்டு ஆராய்ச்சிகள் மேலும் வலுப்படும். சந்திரயான் -4 மூலமாக நிலவுக்கு மனிதனை அனுப்புவதே இறுதி இலக்கு.இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இந்த மாபெரும் திட்டத்தின் இயக்குநர், தமிழரான மயில்சாமி அண்ணாதுரை என்பது கூடுதல் சிறப்பு.

அரசு பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்று, இன்று சந்திரனில் ஆய்வு நடத்திவரும் அண்ணாதுரை, பிற தமிழ்வழி மாணவர்களின் தாழ்வு மனப்பாங்கை அகற்றும் கலங்கரை விளக்கம்.மதிப்பெண்ணுக்காக பெரும் கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் படித்து, மனப்பாடம் செய்து தேர்வெழுதுவோரால், ஆபீஸ் வேலைக்கு மட்டுமே ஆள் தேறும். ஆராய்ச்சியாளர்கள் உருவாக மாட்டார்கள் என்பதற்கு மயில்சாமி அண்ணாதுரையும், அவரின் செல்லப்பிள்ளை சந்திராயனுமே மிகச்சிறந்த உதாரணம். சந்திரயான் வெற்றிப் பயணத்தின் 8வது ஆண்டு விழாவில் இதை நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்