முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி மேதகு என்று வேண்டாம் - "மாண்புமிகு கவர்னர்" என்றே அழைக்க வேண்டும் - கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக கவர்னரை இனி மேதகு ஆளுநர் என அழைக்கவேண்டாம் எனவும், மாண்புமிகு என்றே அழைக்க வேண்டும் என்றும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியரசுத் தலைவரையும், அவரது பிரதிநிதியாக கருதப்படும் ஆளுநரையும் His Excellency என்று அழைப்பது வழக்கம். அதாவது மேதகு என்று தமிழில் அழைப்பர். முதல்வர் மற்றும் அமைச்சர்களை மாண்புமிகு (Honourable) என்று அழைப்பது வழக்கம்.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட வார்த்தைகள் இவை. இதில் மேதகு என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கு முற்றுப் புள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அவர் பிறப்பித்த உத்தரவில், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை மேதகு என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.

தற்போது இந்த உத்தரவை தமிழக ஆளுநர் மாளிகை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இனிமேல் ஆளுநரை மேதகு என்று அழைப்பதற்குப் பதில் மாண்புமிகு என்றுதான் அழைக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளிலும், கோப்புகளிலும் மாண்புமிகு ஆளுநர் என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான நிகழ்ச்சிகளின்போது மேதகு என்று அழைக்கலாம் என்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்