முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட எந்த தகுதியும் தி.மு.க.வுக்கு இல்லை - வைகோ - தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி பிரச்சினையில்  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், தி.மு.க. அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கூட்டம் ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோது மாநிலத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. ஆனால் அதனைச் செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார். தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த மத்திய காங்கிரஸ் அரசோடு, தி.மு.க கூட்டுக் குற்றவாளியாக இருந்தது என வைகோ சாடினார்.

அதனால், காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது ஒரு ஏமாற்று வேலை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது. எனவே இந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்குபெறாது என தெரிவித்தார்.

தீர்வை ஏற்படுத்தாது: தமிழசை:
தி.மு.க. அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை விமான நிலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியதாவது:-

இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாத தலாக்முறை பெண்களின் தனி உரிமையை பாதிக்கிறது.  எல்லோருக்குமான ஓரே சட்டம்  இருப்பதுதான் சரியானதாக இருக்கும். பாரதீய ஜனதா மதம் சார்ந்த  நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை ஏற்படுத்த முயல்கிறது எனக் கூறுவது தவறானது. சாதாரண விஷயங்களுக்கு கூட பெண்ணுரிமை பேசுபவர்கள் இந்த விசயத்தில்  வாய் மூடி மவுனமாக  இருக்கிறார்கள்.

காவிரி விவகாரத்தை பெறுத்தவரை தி.மு.க. அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. முதலில் தி.மு.க. தனது கூட்டணி்க் கட்சியான காங்கிரசுடன் கலந்து பேசி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி 2 ஆயிரம் கனஅடி நீரை வழங்கவேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.  அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் அந்தக் கூட்டத்தால் எந்த தீர்வும் கிடைக்காது. அவசியமற்ற இந்தக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கலந்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், கருணாஸ் எம்.எல்.ஏ.வும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவும் தி.மு.க.வின் சர்வகட்சி கூட்டத்தை கண்டித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்