முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், கேப்டன் டோனி,  விராட் கோலியின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப்பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக ‘டாஸ்’ தோற்றது. முன்னதாக, இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. டேவிச்சுக்கு பதிலாக நீசம் சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர்களாக கப்தில், லாதம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கப்தில் அதிரடியாக விளையாடினார். ஆனால் 7-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் அவரை வெளியேற்றினார். கப்தில் 21 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார். அடுத்து லாதம் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கடந்த 2-வது போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்த இந்த ஜோடி இன்றைய ஆட்டத்தில் 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வில்லியம்சன் 27 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லாதம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 59 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். இருவருடைய ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

28.2 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. 29-வது ஓவரை மிஸ்ரா வீசினார. இந்த ஓவரின் 3-வது பந்தில் டெய்லர் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். அவர் 57 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

30-வது ஓவரின் 4-வது பந்தில் ஆண்டர்சன் 6 ரன்னிலும், 31-வது ஓவரின் 2-வது பந்தில் ரோஞ்சி 1 ரன்னிலும், 32-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் லாதம் 61 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து வந்த சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 9-வது விக்கெட்டுக்கு நீசம் உடன் ஹென்றி ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்து அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நீசம் - ஹென்றி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக நீசம் அதிரடியாக விளையாடினார். 44 பந்தில் 6 பவுண்டரியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரை சதத்தை பதிவு செய்த நீசம் 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 67 பந்தில் 84 ரன்கள் குவித்தது.

கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய போல்ட் கடைசி ஓவரின் 4-வது பந்தில் க்ளீன் போல்டாக நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நியூசிலாந்து. ஹென்றி 37 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் கேதர் ஜாதவ் 5 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பும்ப்ரா, மிஸ்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் ஷர்மா, ரகானே களத்தில் இறங்கினர்.  ரகானே 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹென்றி பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவ்ட்டானார். முதல் விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு உற்சாகப்படுத்தும் வகையில், அடுத்து களமிறங்கிய விராட் கோலியின் ஆட்டம் அமைந்தது. ஷர்மா 13 ரன்னில் அவுட்டாக, கோலியுடன் இணைந்த கேப்டன் டோனி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

சிறப்பாக ஆடிய டோனி 91 பந்தில் 80 ரன்களை குவித்தார். அவர் 22 ரன்கள் எடுத்திருந்த போது 9000 ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டினார். சர்வதேச அளவில் 17-வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். இவருக்கு பின், அணியின் தூணாக நிலைத்து ஆடிய கோலி கடைசி வரை நிலைத்து ஆடி, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் 134 பந்துகளில் 154 ரன்கள்  எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த மணீஷ் பாண்டே 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.  இந்திய அணி 48.2 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், சோத்தி  1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4-வது ஒருநாள் போட்டி அக். 26-ல் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago