முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரங்களை அழிக்காமல் சாலைகளை அகலப்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு தலைமை நீதிபதி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடியவரை மரங்களை அழிக்காமல் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசினார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தென் மாநிலத்திற்கான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சார்பில் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ‘மண்டல சுற்றுச்சூழல்-2016’ என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. நிறைவு நாளான சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அனைத்து நாடுகளும் தயாராக இருக்கின்றன. இப்பிரச்சினைக்கு நகரமயமாதலும், தொழிற்சாலைகள் பெருகிவருவதும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதுமே காரணமாகும்.

வற்றிப்போன நீர்நிலைகளை வேறுவிதமாக பயன்படுத்தலாம் என்று வழக்குகள் வருகின்றன. ஆனால் கனமழை பெய்யும் போது அந்த நிலத்தில் நீர் தேங்குகிறது. கடந்த ஆண்டு சென்னையை மழை வெள்ளம் சூழ்ந்ததை நாம் கண்கூடாக பார்த்தோம். மழைநீர் வடிகால் கால்வாயில், சில இடங்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனாலும் சுற்றுச்சூழல் கெடுகிறது.நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தும்போது, இருபுறத்திலும் உள்ள மரங்களை வெட்டி விடுகின்றனர். ஒருபுறத்தில் உள்ள மரங்களை மட்டும் வெட்டிவிட்டு மற்றொரு புறத்தில் உள்ள மரங்களை அப்படியே விடலாம் என கோர்ட்டு அறிவுறுத்தியது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடியவரை மரங்களை அழிக்காமல் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைக்கு உத்தரவிட்டுள்ளோம். பாலித்தீன் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள், சாக்குப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க முடியும். பிறந்த நாள் விழாக்களில் மற்றவர்களுக்கு நாம் மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம். அவர்கள் மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்க்க வாய்ப்பு அளிக்கலாம். அரசும், பொதுமக்களும் நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்திர குமார் பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டுகளும், ஐகோர்ட்டுகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநில அரசுகளுக்கு அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பசுமை தீர்ப்பாயமும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திடக்கழிவு மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். வெளிநாட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும்.

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நீர்நிலைகள் குறைந்து கொண்டே வருகின்றன.ஏராளமான கால்வாய்களில் இருந்து கழிவுநீர் கங்கையில் கலக்கிறது. எவ்வளவு நீர் கலக்கிறது என்ற புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. அந்த புள்ளிவிவரம் இருந்தால் தான் கங்கை நதியினை சுத்தப்படுத்தும் திட்டம் முழுமையாக நிறைவேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் பசுமை தீர்ப்பாய தென் மண்டல உறுப்பினர் நீதிபதி ஜோதி மணி மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பசுமை தீர்ப்பாய தென் மண்டல உறுப்பினர் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்