முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு சென்னையில் தொடக்கம் : இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. பயணிகளின் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் மொத்தம் 29 சிறப்பு கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சென்னையில் இருந்து 11,225 பேருந்துகளும், மற்ற ஊர்களில் இருந்து 10,064 பேருந்துகளும் என மொத்தம் 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு, நாளை 3,254 பேருந்துகளும், 27-ம் தேதி 3,992 பேருந்துகளும், 28-ம் தேதி 3,979 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதனையொட்டி சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான சிறப்பு கணினி முன்பதிவு மையங்கள் நேற்று முதல் 28-ம் தேதி வரை செயல்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கணினி முன்பதிவு மையங்களும், இதேபோன்று தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் தொடங்கப்பட்டுள்ளன. www.tnstc.in என்ற இணையதள முகவரி மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம். பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களான அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம், கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்