முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தடையின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : காவிரியில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தடையின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் உரிய நேரத்தில் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை என்றும், 15 லட்சம் ஏக்கருக்கு பதிலாக, 12 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா நெல் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பாக, தமிழக அரசு விளக்கங்கள் கோரி தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கடந்த 19-ம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தமிழக அரசு கூடுதல் விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்று அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று எழுத்துப்பூர்வமான மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வாதத்தை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டிற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என தமிழக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி பாசனப் பகுதிகளையும், அணைகளையும் ஆய்வு செய்த உயர் தொழில்நுட்பக் குழு தாக்கல் செய்த அறிக்கை பல்வேறு குறைபாடுகளை கொண்டதாக உள்ளதாகவும், தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவிரியில் கர்நாடகம் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டிருந்தால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஜூலை மாதம் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டிருக்கும் என்றும், தண்ணீர் கிடைக்காததால் திட்டமிட்டபடி சாகுபடி செய்ய முடியவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், 15 லட்சம் ஏக்கருக்கு பதிலாக, 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யவேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை கர்நாடகத்திற்கு 47.62 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே தேவை என்றும், அம்மாநில அணைகளில் 89.16 டி.எம்.சி. அடி தண்ணீர் இருப்பதாகவும் தமிழகத்தின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 41.54 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடலாம் எனவும், தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 13-ம் தேதியிலிருந்து கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர உத்தரவிடவேண்டும் என்றும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீரை திறந்துவிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்றும், தமிழக அரசின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுக்களை இன்று நீதிபதிகளிடம் முறையிட்டு தாக்கல் செய்யுமாறு, சுப்ரீம் கோர்ட் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்