முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் யார்? யார்? என்பது குறித்து தமிழக அரசு புதிய அரசாணையை நேற்று வெளியிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில், பதவியிடங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (பொறுப்பு) கடந்த 17-ம் தேதி பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் யார்? யாரை? தனி அதிகாரிகளாக நியமிக்கலாம் என்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையை அடுத்து, இப்போது அனைத்து உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி உள்பட நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தனி அதிகாரிகளை நியமித்து, நகராட்சி நிர்வாகம் -குடிநீர் வழங்கல் துறையும், ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையும் உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளின் விவரம்:-
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளின் பணிகளை தனி அதிகாரிகள் மேற்கொள்வர்.

மாநகராட்சிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்களும், நகராட்சிகளுக்கு நகராட்சி ஆணையாளர்களும், பேரூராட்சிகளில் (இரண்டு வகையான பேரூராட்சிகள்) உதவி இயக்குநர் அல்லது செயல் அலுவலர்கள் தனி அதிகாரிகளாக செயல்படுவர்.

31 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 31 மாவட்ட ஊராட்சி பதவியிடங்களுக்கு கூடுதல் இயக்குநர் அல்லது கூடுதல் ஆட்சியர் அல்லது இணை இயக்குநர் அல்லது மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் திட்ட இயக்குநர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு நிலைகளில் உள்ள அதிகாரிகள் தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். அதாவது, உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை நிர்வகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பதவியிடங்களை எந்தெந்த அதிகாரிகள் நிர்வகிக்க உள்ளனர் என்பதற்கான அரசு உத்தரவு வெளியான நிலையில், அவர்கள் அனைவரும் இன்று முதல் தங்களது பொறுப்புகளை ஏற்கவுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்