முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலதிபர்கள் திருப்பித் தர வேண்டிய 85 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம்கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாடு முழுவதிலும் 87 தொழிலதிபர்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பித் தர வேண்டியுள்ளதாகவும், அவர்களின் பெயர்களை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்றும், சுப்ரீம்கோர்ட் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியல் ஒன்றை ரிசர்வ் வங்கி சுப்ரீம்கோர்ட்டிடம் மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான அமர்வு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களை படித்துப் பார்த்தது.

87 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு தலா 500 கோடி ரூபாய்க்கும் மேல் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வாராக்கடன்களையும் சேர்த்து மொத்தம் 85 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், இவர்களின் பெயர்களை வெளியிட என்ன தடை? என ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பினர்.

இந்தப் பெயர்களை ஏன் பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்று கேட்ட நீதிபதிகள், இவர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதாகவும், தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் திரும்ப வசூலிக்க இயலாது என ஒரு பெருந்தொகையை குறிப்பிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ரிசர்வ் வங்கி சார்பில், ஆஜரான வழக்கறிஞர், இந்தப் பெயர்களை வெளியிட இயலாது என்றும், சட்டத்தில் உள்ள சில ரகசியம் காக்கும் பிரிவுகளின் கீழ், பெயர்களை வெளியிட முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், சுப்ரீம்கோர்ட் ரிசர்வ் வங்கியின் இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதில் ரகசியத் தன்மை எதுவும் இல்லை என்றும், கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருப்பதில் ரகசியத் தன்மை என்ன இருக்கிறது? என்றும் நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

நாட்டின் நலனுக்காகவே ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் என்றும், சில வங்கிகளை காப்பாற்ற செயல்படக்கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த அமர்வில், நீதிபதிகள் சந்திர சூட், எல்.என். ராவ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்