முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு  வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நவம்பர் மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலராக, கலால் துணை ஆணையர், தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆர்.டி.ஓ, திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் திருநகர் பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை அடுத்து, தேர்தல் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்புவரை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வரும் அனைவரும், தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சைபுதீனிடம்  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலையொட்டி அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) இன்னாசி முத்துவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள, நெல்லித்தோப்பு தொகுதியிலும், நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியும், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாராயணசாமி நவம்பர் 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் அனைத்தும் முதன் முறையாக கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 2-ம் தேதிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 3-ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ்பெற நவம்பர் மாதம் 5-ம் தேதி கடைசிநாளாகும். மனு தாக்கல் செய்ய வருபவர்கள், தங்களது வாகனங்களை, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 வாகனங்கள் மட்டும் மனு தாக்கல் நடைபெறும் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டுமென அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். வேட்புமனு தாக்கல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்