முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கடைசி ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா ?

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம்  - நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்பது இன்று தெரிந்துவிடும். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 4 ஆட்டம் முடிந்து உள்ளது. இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

டோனி தலைமையிலான இந்திய அணி 4-வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி விட்டது. மிடில் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன் நிலைத்து நின்று விளையாடாததால் தோல்வி ஏற்பட்டது. டோனி 4-வது வீரராக களம் இறங்கியும் பலன் இல்லாமல் போனது. இதனை சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மேலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ரோகித்சர்மா, ரகானே நல்ல தொடக்கம் அளிக்காதது பாதிப்பாக உள்ளது. இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பந்து வீச்சில் இந்திய வீரர்கள் கடைசி கட்டத்தில் ரன் நிறைய கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பேட்டிங்கில் விராட் கோலி நல்ல நிலையில் உள்ளார். மற்ற வீரர்களும் தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்றைய போட்டியில் வென்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும். எனவே இந்தியா கடுமையாக போராட வேண்டியது முக்கியம். தீபாவளி நாளில் நடக்கும் ஆட்டத்தில் தொடரை வென்று ரசிகர்களை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டி தொடரில் தோற்ற நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் கடும் சவால் கொடுத்து வருகிறது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், குப்தில், ரோஸ் டெய்லர், டாம் லாதம் போன்ற வீரர்கள் உள்ளனர்.

4-வது ஆட்டத்தில் குப்தில் நல்ல பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பந்து வீச்சில் டிம் சவுதி, போல்ட், சான்ட்ரா, சோதி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்தியாவுக்கு நிகராக போராடி தொடரை சமன் நிலைக்கு கொண்டு வந்து உள்ளனர். இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியதில்லை. அந்த குறையை போக்க இன்றைய போட்டியில் வென்று முதல் முறையாக தொடரை வெல்ல ஆர்வத்தில் இருக்கிறது.
அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, வீராட்கோலி, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர்பட்டேல், அமித் மிஸ்ரா, பும்ரா, உமேஷ்யாதவ், மன்தீப் சிங், குல்கர்னி, ஜெயந்த் யாதவ்.
நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்), குப்தில், லாதம், ரோஸ் டெய்லர், ஆண்டர்சன், ரோஞ்சி, ஜேம்ஸ் நீசம், சான்ட்னெர், பிரேஸ்வெல், சவுத்தி, சோதி, போல்ட், மேட் ஹென்றி, ஆண்டன் டேவிச், வாட்லிங்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்