முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்த சஷ்டி விழா: முருகன் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, கந்த சஷ்டி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்டர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற சூரசம்ஹார விழாவைகாண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

முருகபெருமானின் அறுபடை வீடுகளின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 31-ம் தேதி தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். 6-ம் திருநாளான நேற்று (சனிக்கிழமை) மாலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.

மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி - அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடந்தது. 7-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவித்தனர். பக்தர்கள் கோவில் வளாகம், மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்து வழிபட்டனர். சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு கம்பு வேலிகள், கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் உன்ன சொக்கநாதர் கோவில் முன்பாக “சூரசம்ஹாரம்’ நடந்தது.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர், தக்கார் ச.சிவக்குமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்