முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு என வைகோ கூறியது ஏன்?- திருமாவளவன் விளக்கம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறானது என வைகோ கூறியது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய தலித் முன்னணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருவமாளவன் சென்னை விமான நிலையம் சென்ற போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேசிய தலித் முன்னணி கூட்டம் திடீரென கூடுவதன் நோக்கம் என்ன?
ப:- இந்த முன்னணி 2006-ல் தொடங்கப்பட்டது. டெல்லியிலும் மும்பையிலும் ஏற்கனவே 2 மாநாடுகள் நடைப்பெற்றன. 3-வதுமாநாடு நவம்பர் 12-ந் தேதி அன்று சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.தவிர்க்க முடியாத நிலையில் அது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எந்த தேதியில் நடத்துவது குறித்து முடிவு எடுக்க இன்றைய ஆலோசனை கூட்டம் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடக்கிறது.

கே:- தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் தே.மு.தி.கவிற்கு மக்கள் நலக்கூட்டணி ஆதரவு அளிக்குமா?
ப:- இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை. யாருக்கு ஆதரவளிப்பது என்றும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. புறக்கணிப்பு என்ற அடிப்படையில் தான் எமது கூட்டணி தொண்டர்களுக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்.

கே:- தே.மு.தி.க ஆதரவு கேட்டால் ஆதரவு கொடுப்பீர்களா?
ப:- இதுவரையில் அப்படி ஆதரவு கோரி தே.மு.தி.க தரப்பில் இருந்து அணுகவில்லை. அப்படி அணுகினால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கலந்து பேசி முடிவு செய்வோம்.

கே:- விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு என்று வைகோ கூறியிருக்கிறாரே?
ப:- தொடக்கத்தில் மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருந்தோம். பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டது. அதனால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம். இது பொதுமக்கள் இடை யே விமர்சனத்திற்கு உள்ளானது. முதலில் எடுத்து நிலைப்பாட்டை பின்னர் மாற்றிக்கொண்டது தவறு என்கிற பொருளில் அவர் கூறியிருக்கலாம்.

கே:- வைகோவை பிரேமலதா கடுமையாக சாடி இருக்கிறாரே?
ப:- பிரேமலதா விஜயகாந்தின் கருத்துக்கு வைகோ பதில் சொல்வார். இதில் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை.

கே:- மக்கள் நலக்கூட்டணியில் தற்போது ஒருமித்த கருத்து இல்லையே?
ப:- மாற்றுகருத்துக்கள் எழுவதால் மக்கள் நலக்கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கருதக்கூடாது. மாற்று கருத்துக்களை வெளிப்படையாக அனுமதிக்கிற ஜனநாயகம் மக்கள் நலக்கூட்டணியில் உள்ளது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

கே:- தஞ்சையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்பட்டு உள்ளதே?
ப:- குருவை, சம்பா ஆகிய இரண்டு போகங்கள் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. உடனடியாக அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமனம் செய்து டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்.

கே:- பொதுசிவில் சட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:- வருகிற 15-ந்தேதி அன்று பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சென்னையில் எனது தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகளின் துணை நிலைய அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. மாநாட்டில் மக்கள்நலக் கூட்டணி தலைவர்களும் மத சார்ப்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago