பெரும்பாலான வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பவில்லை : வங்கி அதிகாரிகள் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2016      வர்த்தகம்
rupee note change crowd

புதுடெல்லி  - ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை போதிய அளவுக்கு அனுப்பவில்லை என்றும், இதனால்தான் பொதுமக்களிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.  மத்திய அரசு திடீரென முன்னறிவிப்பின்றி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், நாட்டில் பொதுமக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், போதிய அளவு இந்த நோட்டுகள் கையிருப்பில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளுக்கு இந்த புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, புதிய ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை என்றும், அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளும் போதிய அளவுக்கு இல்லை என்றும், வங்கி அதிகாரிகளே குற்றம்சாட்டியுள்ளனர். இதனால்தான், மக்களிடையே தேவையற்ற பீதியும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அடுத்த மாதம் இறுதி வரை காலஅவகாசம் இருப்பதால், பொதுமக்கள் அமைதி காத்து நிதானமாக தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், அந்த நோட்டுகள் பயனற்றவையாகப் போகாது என்றும் வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஆனால், அரசு போதிய அளவு பணப்புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: