முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணை இமை காப்பது போல் மதுரை மக்களை காக்கும் மதுரை மீனாட்சி அம்மன்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

கண்ணை இமை காப்பது போல் மதுரை  மக்களை காக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது (கோ-கடவுள்: இல்-வீடு) அதாவது கடவுளின் வீடு இந்திர பதவியை அடைவதற்காக கடும்தவம் செய்து கொண்டிருந்த விஸ்வரூபன்-விருத்திகாசுரர் ஆகிய அசுரர்களை தேவேந்திரன் கொன்றான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) தேவர்க்கதிபதியைப் பற்றியது.

கேதாரம், காசி, காஞ்சி முதலான பல ஷேத்திரங்களாலும் தீராத தோஷம் கடம்பவன சொக்கலிங்கப் பெருமானால் தீர்ந்தது. இதனால், மகிழ்வுற்ற தேவேந்திரன், தேவதச்சர்களின் தலைவனான மகாசிற்பி மயனைக் கொண்டு கோயில் அமைத்து கடம்பவன மதுரையிலேயே சொக்கலிங்க வடிவில் ஈசனை வழிபட்டான். அந்த நாளிலே மணவூரைத் தலைநகராகக் கொண்டு நாட்டை ஆண்டு வந்த குலசேகர பாண்டிய மன்னன், தனஞ்செயன் என்ற வணிகனால் கடம்பவனத்திலுள்ள சொக்கேசனின் கோயிலைப் பற்றி அறிந்து சென்று வணங்கினான்.

நள்ளிரவில் இந்திரன் முதல் தேவர்கள் எல்லாரும் வந்து வணங்கிச் செல்லும் அந்தக் கோயிலை ஆகம விதிப்படி அற்புதக் கோயிலாக உருவாக்கினான். நாற்புறமும் எட்டு யானைகள், 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் தாங்கும் இந்திரவிமானக் கோயில் அது.

அன்னையின் அவதாரம்:- குலசேகர பாண்டியனின் வழித் தோன்றலான மலையத்துவஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆள்கிறான். இவனது மனைவி காஞ்சனமாலை சோழமன்னனின் மகள். இவள் முற்பிறவியில் மீனாட்சியம்மையைப் பிரார்த்தித்து அம்மனையே மகளாக அடையும் வரத்தைப் பெற்றிருந்தாள். மலையத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் இவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அந்த யாகத்தீக்குள்ளிருந்து மூன்று வயதுச் சிறுமியாக ஈஸ்வரி மீனாட்சி உருவில் நடந்து வந்து காஞ்சன மாலையின் மடியில் அமர்ந்து “அம்மா” என்றாள்.

யாகத்தின் மூலமாகக் கிடைத்த தெய்வீகக் குழந்தைக்கு மார்புக் காம்பு அடையாளங்கள் மூன்று  இருந்தன. இதைக் கண்டு அரச தம்பதி அதிர்ந்தனர். மன்னா வருந்தாதே இக்குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயரிட்டு வளர்த்துவா!. பருவவயதில் அவள் தனக்கேற்ற கணவனைக் காண்பாள். அப்போதே மூன்றாவதாக உள்ள தனம் மறைந்துவிடும்” என்று அசரீரி ஒலித்தது.

ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்து கன்னி பருவமெய்திய தடாதகைக்கு மன்னன் மணிமுடி சூட்டி அரசியாக்கிவிட்டு சில தினங்களில் சிவலோக பதவியடைந்தான். அரசி தடாதகைப்பிராட்டி திக்விஜயம் செய்தாள். ஐம்பத்தியாறு தேச மன்னர்களையும், அஷ்டதிக்குப் பாலகர்களையும் பணியச்செய்தாள். கயிலாயத்திற்கே படை நடத்திச் சென்றபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. அங்கே தனக்கேற்ற மணாளனைக் கண்டாள். ஈசனைப் பார்த்ததும், இயல்புக்கு மாறாக இருந்து வந்த மூன்றாவது தனம் மறைந்துவிட்டது.

சுந்தர பாண்டியனாக மதுரைக்கு வந்தார். சொக்கேஸ்வரன். மீனைப் போன்று விழிமூடாது பக்தர்களைக் காக்கும் கீர்த்தியைப் பெற்றதால் மீனாட்சி என்ற பெயர் பெற்ற தடாதகைக்கும் சுந்தரேச பாண்டியருக்கும் திருமணம் நடந்தது. மீனாட்சி-சௌந்தர பாண்டியனாக மதுரையை ஆண்ட தெய்வீகத் தம்பதிகள் முருகனின் அம்சமாக உக்கிரபாண்டியனை மகனாகப் பெற்று சகல கலைகளையும் அவனுக்குப் பயிற்றுவித்து. தக்க பருவத்தில் காந்திமதியை மணம் செய்து வைத்துவிட்டு அவனுக்கு பட்டம் சூட்டி வேல்வளை, செண்டு ஆகியவற்றை ஆட்சிக்கருவியாகத் தந்து ஆசிர்வதித்து விட்டு சொக்கலிங்கத்துள் ஐக்கியமாகி மறைந்துவிட்டனர்.

திருவிளையாடல்கள்:- உக்கிர பாண்டியனும் நீதி வழுவாது ஆட்சிபுரிந்தான். அவனுக்கு பின் வந்த பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே நாட்டை ஆண்டனர். இவர்கள் ஆண்ட காலத்தில் சிவன் சித்தனாகவும், புலவனாகவும். வேதியனாகவும், மீனவனாகவும், வளையல் செட்டியாகவும் அவதாரமெடுத்து அவ்வப்போது மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.

அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்களோ ஏராளம். கல்யானையை கரும்பு தின்னச் செய்து ஆங்கிலேய கலெக்டரின் உயிரை சிறுமி வடிவில் வந்து காப்பாற்றியது. காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக சாஸ்திரிகளுக்குப் பார்வை கிடைக்க அருள்புரிந்தது. ஸ்ரீராகவேந்திரருடன் உடனிருந்து அருள் பாலித்தது. மீனாட்சி கோயில் மடப்பள்ளி சமையல்காரர் சீனிவாசனுக்காக தனது மூக்குத்தியை வெளிச்சம் தர வைத்து சமையல் செய்தது. இப்படி எத்தனையோ மீனாட்சி சொக்கநாதர் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள் -இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார்.

மதுரை:- சிவபெருமான் தன் தலையில் சூடியுள்ள பிறைச்சந்திரனிடத்தில் உள்ள அமிர்தமாகிய மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சின் வேகத்தை நீக்கி புனிதப்படுத்தியதால், அது மதுரை என்ற பெயரானது. இதனை திருவிளையாட்டுப் புராணம் செப்புகிறது. கடம்பவனம் மதுரையாக உருவான போது நடுவில் தாமரை மொட்டுப்போல கோயிலும் அதைச் சுற்றி இதழ்கள் போல தெருக்களும் அமைக்கப்பட்டன.

பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை பங்காளிக்காய்ச்சலால் பாண்டிய மன்னர் ஆட்சிக்கே கேடுவந்து அத்துடன் அந்தப்பரம்பரையே அழிந்தது. அரசுரிமைப் போட்டியில் ஒருவன் இலங்கை மன்னனிடமும், இன்னொருவன் டெல்லி சுல்தானிடமும் உதவிகோரிச் செல்ல டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் (உண்மைப்பெயர் : மலுக்கு நேமி-இவன் மூன்றாம் பாலினம் - அரவாணி) மதுரைக்கு வந்து கோயிலையும் நாட்டையும் கொள்ளையடித்தான். பாண்டிய நாடு இஸ்லாமியர் வசமானது. 48 ஆண்டுகள் 7 முஸ்லீம் மன்னர்கள் ஆண்டனர். மீனாட்சி கோயில் இடிக்கப்பட்டு பூஜை செய்யப்படாமல் கிடந்தது. கி.பி.1378 ல் விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த குமார கம்பண்ணர் அவர்களை வென்று பாண்டிய நாட்டை மீட்டார். அதன்பிறகு நாயக்கர்களின் ஆட்சி தொடங்கியது. சிறிது சிறிதாக கோயில் எடுத்துக் கட்டப்பட்டது.  திருமலை நாயக்காரால் கோயில் மட்டுமின்றி நகரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. நாயக்கர் மகால் வண்டியூர் தெப்பக்குளம், திருவிழாக்கள் எல்லாமே புதிதாகப் படைக்கப்பட்டன.

மதுரை நகரைப்பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம்தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது. மதுரை பற்றியும் மீனாட்சி பற்றியும் எழுத எண்ணூறு பக்கங்கள் தேவைப்படும.;

மதுரை ஒரு வரலாற்றுக்குவியல் புராணத்தின் பொக்கிஷம்.
சித்திரை வீதி, ஆடிவீதி, ஆவணி வீதி என கோயிலின் நாற்புறமும் தமிழ் மாதங்களின் பெயர்களில் தெருக்கள், ஆண்டு முழவதும் விழாக்கள். விழாக்களின் உச்சம் சித்திரைத் திருவிழா. பல இலட்சம் மக்கள் பரவசத்துடன் கூடும் பெருவிழா, பண்பாட்டின் கலைச்சின்னமாக விளங்கும் மதுரைக்கு இணை மதுரைதான். (தொகுப்பு: மதன்)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்