முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பூரண குணமடைந்தார் விரைவில் வீடு திரும்புவார் : பொன்னையன் தகவல்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அனைத்து மதப் பிரார்த்தனையாலும் மருத்துவர்களாலும் தமிழக முதல்வர்  ஜெயலலிதா  பூரண குணமடைந்துள்ளதால் விரைவில் வீடு திரும்பி ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க உள்ளார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்   நேற்று தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் 22ம் தேதி நீர் சத்துக் குறைவு மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நுரையீரல் தொற்று இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்து, அதற்கேற்ற சிகிச்சை  அளிக்கப்பட்டது. மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் என பலரும் தொடர்ந்து முதல்வரின் சிகிச்சையில் ஈடுபட்டனர்.

தற்போது, முதல்வரின் உடல் நிலை முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. என்றாலும்,  முதல்வர் ஜெயலலிதா விரும்பும் போது, வீட்டிற்கு செல்லலாம் என்று அப்போலோ மருத்துவமனை  தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்தார். .இந்நிலையில்,  நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் என அனைவரும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை முதல்வருக்கு அளித்துள்ளனர்.

இதன் காரணமாகவே முதல்வர் குணம் அடைந்திருக்கிறார். முதல்வர்  ஜெயலலிதா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல், ஜாதி மதம் பாராமல் அனைத்து மதத்தினரும் செய்த பிரார்த்தனையும், முதல்வரின் தன்னம்பிக்கையுமே அவரை காப்பாற்றி இருக்கிறது.மேலும், அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியிலும், அதிமுக வெற்றி பெரும். இந்த 4 தொகுதிகளிலும் மக்கள் முதல்வரின் பக்கம்தான் இருக்கின்றனர். எனவே, இந்தத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெரும்.

தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை அமைக்க அதிமுகவுக்கு தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள்.முதல்வர் விரைவில் வீடு திரும்பி ஆட்சி, நிர்வாக பொறுப்பை ஏற்கும் காலம் மிக விரைவில் உள்ளது. முதல்வர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றியினை காணிக்கையாக்குகிறேன் என்று பொன்னையன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்