முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை மாதம் பிறந்தது - ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

புதன்கிழமை, 16 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : கார்த்திகை மாதம்  நேற்று  தொடங்கியதை அடுத்து, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளன்றே, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதம்  நேற்று தொடங்கியதை அடுத்து, ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்ப சுவாமி கோயிலில், அதிகாலை முதல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஐயப்பனை வழிபட்டு, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். கார்த்திகை மாத பிறப்பையொட்டி, கோயிலில் மிருத்யுஞ்ஜய ஹோமம், சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

முக்கடல் சங்கமிங்கும் கன்னியாகுமரியில்  நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முடித்ததும், மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற பார்வதிபுரத்தில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காணும் இடமெல்லாம் கருப்பு, நீலம் மற்றும் காவி உடை அணிந்த பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த பிறகு தங்கள் விரதத்தை தொடங்கினர். ஆந்திர மாநிலத்திலிருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.

திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீஅய்யப்பன்மணி மண்டபத்தில், அதிகாலை முதல் ஏராளமானோர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஏராளமான பெண்களும், குழந்தைகளும் பங்கேற்றனர்.

தூத்துக்குடி சிவன் கோயிலில், அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஐயப்பன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தலைமை குருசாமி முன்னிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் வடக்கு ராஜவீதியில் அமைந்துள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில், கார்த்திகை முதல் நாளான நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி மற்றும் உத்திராட்ச மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோயில், கண்டோன்மென்ட் ஐயப்பன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அக்னி ஸ்தலமான அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் 2-வது பிரகாரத்தில், ஐயப்பன் சன்னதியில் ஏராளமான பக்தர்கள்  மாலை அணிந்தனர். குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்ததை அடுத்து, அவர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் காவேரி ஆற்றில் நீராடி, மாலை அணித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் 48 நாள் விரதத்தை தொடங்கினர்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள், கோயில்களுக்குச் சென்று மாலை அணிந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்