முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசிக்கில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் விமானத்தில் சென்னை வந்தது

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, நாசிக்கில் இருந்து நேற்று  காலை மேலும் 14 டன் 500 ரூபாய் நோட்டுகள் விமானத்தில் சென்னை வந்தது. பணம் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அதனை மாற்ற வங்கிகள் முன்பு பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வினியோகம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 15-ந்தேதி புதிய 500 ரூபாய் நோட்டு டெல்லியில் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு மாநிலமாக 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு விடப்பட்டது.தமிழகத்தில் 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.வங்கியிலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு பணம் பரிமாற்றம் முடங்கியது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கரூர் வைசியா வங்கியில் வினியோகிக்கப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் புதிய 500 ரூபாய் பொதுமக்களுக்கு கிடைத்தது.சில்லரை தட்டுப்பாடு கடுமையாக இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஓரளவு ஆறுதல் தந்தது.எனினும் அனைத்து வங்கிகள், ஏ.டி.எம். மையங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது சர்வ சாதாரணமாக கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானம் மூலம் நேற்று  அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தின் சரக்கு பிரிவு முனையத்தில் பலத்த பாதுகாப்புடன் ரூபாய் நோட்டு பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன. மொத்தம் 14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.மத்திய தொழில் பாது காப்பு படையினர் பலத்த பாதுகாப்புடன் ரூபாய் நோட்டு பெட்டிகளை 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தனர். புதிய 500 ரூபாய் நோட்டு கள் கொண்டு வரப்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் 2 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிகிறது.

எனவே வங்கி, ஏ.டி.எம். மையங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அதிக அளவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் புதிய ரூ.500 நோட்டு இன்று எந்த வங்கியிலும் வினியோகம் செய்யப்படவில்லை. புதிய ரூபாய் நோட்டு கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் காத்து நின்றனர். ஆனால் வங்கிகளிலோ, ஏ.டி.எம். மையங்களிலோ வழங்கப்படவில்லை.புதிய ரூ.500 நோட்டுகள் வங்கிகளில் திங்கட்கிழமை வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது. இன்று  (சனிக்கிழமை) வங்கிகள் செயல்பட்டாலும் பொது மக்களுக்கு பணம் கிடைக்காது.பணம் தட்டுப்பாடு படிப்படியாகதான் குறையும். ஒரே நாளில் குறையாது என்றும் புதிய ரூ.500 நோட்டுகளும் குறைந்த அளவில்தான் வந்துள்ளன என்பதால் பணம் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒருசில நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்