முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்வில் ஏற்றம் தரும் கார்த்திகை சோமவார விரதம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

 தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும். கார்த்திகையில் சுப காரியங்கள் நடத்துவது சிறப்பு. விரதங்கள் கடை பிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது. கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன். இவருக்கு தட்சன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகினியிடம் அதிக அன்பு பாராட்டினான். மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். தட்சன் வெகுண்டு போய் சந்திரனை தேய்ந்து போகும்படி சாபமிட்டார். தன்னுடைய ஒளி தேய்ந்து போவதை கண்டு வேதனையடைந்த சந்திரன் சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி பாதி நாள் வளர்ந்தும் பாதி நாள் தேய்ந்தும் இருக்கும் படி சாபத்தை மாற்றியமைத்தார்.

 இவ்வாறு சந்திரன் சிவனை சரணடைந்த நாள் கார்த்திகை சோமவாரமாகும். சந்திரனின் சோகம் போக்கி சுகம் அருளச் செய்த சிவபெருமானிடம் சந்திரன் இந்ந சோமவார விரதத்தை கடைபிடிப்பவர் வாழ்வில் சுகங்கள் பெருக வேண்டும் என்று வேண்டினான். சிவபெருமானும் அவனது வேண்டுதலை ஏற்று சோமவார விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சுகங்களை நல்குவதாக வாக்களித்தார் இதுவே கார்த்திகை சோமவார விரதக் கதையாகும். கார்த்திகை மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தினத்தில் விரதம் துவங்க வேண்டும். அது முதல் தம் விருப்பப்படி அந்த மாதம் மட்டுமே அல்லது 16 வாரங்கள் அல்லது ஆண்டு முழுவதும் என விரதம் இருக்கலாம்.

 சோம வார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது. உத்தமமான விரதங்களுள் ஒன்று சோமவார விரதம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அதிலும் சிவனுக்குரிய சோம வாரத்தில் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் உத்தமமானது. கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும். ஒரு வேதியர் தம்பதியினரை அழைத்து வந்து உபச்சாரங்கள் செய்து அவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து விட்டு முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

 இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும். கார்த்திகை மாதத்தில் சிவபெருமான்; அக்னிப் பிழம்பாக இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் செய்யப்படுகின்றது. 108 சங்கு களில் நீரினை நிரப்பி வாசனை திரவியங்களை அதில் போட்டு சந்தனம் முதலிய அலங்கார திரவியங்களை சமர்ப்பித்து இறைவனை அதில் ஆகர்ஷணம் செய்து பூஜைகள் செய்து பின் அந்த நீரையும் கலச நீரையும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சங்காபிஷேகம் ஆகும்.

 ஓவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் கார்த்திகை மாதத்தில் திருமால் குடியிருக்கிறார். சங்கு லஷ்மியின் அம்சமாகும் எனவே சங்காபிஷேகம் சிவ வைணவ ஒற்றுமையையும் பறைசாற்றுகிறது. கார்த்திகை சோமவார விரதத்தை கடைபிடிப்பவர்கள் எனக்கு விருப்ப மானவர்கள். அவர்களை  என்னோடு இணைத்துக் கொள்வேன் என்று சிவபெருமான் கூறுவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

 கார்த்திகை சோமவார தினத்தில் சிவனையும் விஷ்ணவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லஷ்மி கடாட்சம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும் அந்திப் பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும். பல்வேறு கிராமங்களில் பழமையான சிவாலயங்கள் வழிபாடின்றி புதர் மண்டிக் கிடக்கின்றது கார்த்திகை மாத சோம வார தினத்தில் பழமையான சிவாலயங்களுக்கு சென்று ஒருவேளை பூஜைக்கு உதவி விளக்கேற்றி வழிபட நல்வாழ்கை அமையும் சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து சிவதரிசனம் செய்து வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

 இதனையொட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோவிலில் கார்த்திகை மாதம் 6ம், 13, 26, 27, தேதிகளில் திங்கட்கிழமைகளில் சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும் நடைப்பெறுகிறது. தகவல் சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்