முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஹவானாவில் பேரணி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஹவானா : கியூபா முன்னாள் அதிபர்  பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று, மாபெரும் அமைதிப் பேரணி நடந்தது.

9 நாள் துக்கம் :

கியூபாவில், மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் அந்நாட்டின் ராணுவ சர்வாதிகாரத்தை முறியடித்து புதிய அரசை நிறுவியவர் பிடல் காஸ்ட்ரோ. பொதுவுடைமை தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி புரிந்து, உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்த காஸ்ட்ரோ, தனது 90-வது வயதில் கடந்த 25-ஆம்  தேதி காலமானார். இதனையடுத்து, கியூபாவில்   9 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

கியூபாவில், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைப் பகுதிகளில் விற்பனை நடைபெறவில்லை. மேலும், பல்வேறு நகரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கியூபாவில் உள்ள மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோவின் உடல் எரியூட்டப்பட்டது. பின்னர் அவருடைய அஸ்தி ஒரு கலசத்தில் சேகரிக்கப்பட்டது. கியூபா அரசு, டிசம்பர் 4-ந் தேதி வரை துக்கம் அனுசரிப்பதால், காஸ்ட்ரோவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக   நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக 1953-ம் ஆண்டு காஸ்ட்ரோ தனது புரட்சியை தொடங்கிய தென்கிழக்கு நகரான 'சாண்டியாகோ'வுக்கு அந்த அஸ்தி கலசம் இறுதியாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு 4-ந் தேதி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு அவர் புரட்சியை தொடங்கிய இடத்தில் அஸ்தியை அரசு மரியாதையுடன் புதைக்கப்படுகிறது. 

அமைதி பேரணி:

இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நாளன்று லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து பிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில், நேற்று, மாபெரும் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி  நடந்தது. இதேபோல், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான, சாண்டியாகோவிலும் அமைதிப் பேரணி திட்டமிட்டபடி நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனிடையே, இந்தியாவிலும் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்