முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாடு முழுவதும் திரையரங்குகளில் படக்காட்சி திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில் சுருக்கப்பட்ட தேசிய கீதத்தை இசைக்க தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தாய்நாட்டின் மீது அன்பு தேவை

ஷ்யாம் நாராயண் சவுஸ்கி என்பவர் தேசிய கீதத்தின் மீதான அவமதிப்பு என்பதை வரையறுத்து சொல்லுமாறு சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்த வேண்டும். இது எனது தேசம், எனது தாய்நாடு என்ற பெருமித உணர்ச்சி வேண்டும். நான் ஒரு இந்தியன் என்பதில் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கிருக்கும் சில கெடுபிடிகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால், இங்கு இந்தியாவில் எந்தவித கெடுபிடியும் உங்களுக்கு பிடிப்பதில்லை.

தேசிய கீதம் இசைக்கப்படும்போது குடிமக்கள் அனைவரும் அதற்கான மரியாதையை செலுத்துவது, தேசிய பெருமித அடையாளங்களுக்கு அவமதிப்பு செய்வதை தடுக்கும் சட்டவிதியின்படி கட்டாயமாகும். தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் நாட்டுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தனர். .

உத்தரவின்  சில அம்சங்கள்

1. நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும்.
2. அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
3. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக் கொடியை திரையிட வேண்டும்.
4. தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது.
5. தேசிய கீத வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது.
6. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைத்து வாயில் கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
   சுப்ரீம் கோர்ட்  எச்சரிக்கை

திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் டின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்