முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுறுத்தும் 'நாடா' புயல்' - 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகியுள்ள 'நாடா' புயல் நாளை கடலூர் அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தில்  2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

'நாடா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையால் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் 'நாடா' புயல் நாகப்பட்டினத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலூர் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடலில் அதிக சீற்றம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வுக்கூட்டம்

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் என்.சி மார்வா, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். வருவாய் நிர்வாகத்துறை ஆணையரும் அதன் முதன்மை செயலாளருமான சத்யகோபால், தமிழக அரசு, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அப்போது எடுத்துரைத்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் உள்ள ஆய்வின் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வரும் புதிய திட்டங்கள், அனைத்துத்துறைகளின் சார்பில் மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், சமூக பங்கோடு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவை சந்தித்து தேசிய பேரிடர்மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன், நிதித்துறை ( செலவு) செயலாளர் செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர், சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வருவாய் நிர்வாகத்துறையின் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.

நாளை கரையை கடக்கிறது

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் 'நாடா' புயல், வடதமிழ்நாட்டின் கடலோர பகுதியில் வேதாரண்யம், புதுச்சேரி இடையே கடலூர் அருகே நாளை, அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தாழ்வான பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மீட்புக்குழு

புயல் நிலவரம் குறித்து பொதுமக்கள் 1070 மற்றும் 1077 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு தமிழகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுக்கள் சென்னை, கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்