முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு - மம்தா பயணித்த விமான விவகாரம்: எதிர்கட்சிகள் தொடர் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பழைய ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பயணித்த விமானம் தொடர்பாக திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

விவாதம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இரு வாரமாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவைக்கு வந்து, விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று ராஜ்ய சபாவிற்கு வந்தார். அவர் அவையில் இருந்தபோதும் எதிர் கட்சியினரின் குறுக்கீடுகளால் அவை நடவடிக்கைகள் தடைபட்டன. கடும் அமளியின் மத்தியில் பிரதமர் மோடி அமைதியாக அமர்ந்து இருந்தார். எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

திரிணாமுல் குற்றச்சாட்டு

ராஜ்ய சபா நேற்று கூடியதும் கொல்கத்தாவில்  மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பயணம் செய்த விமானம் போதிய எரிபொருள் இல்லாமல் தரையிறங்கியது குறித்தும், விமானம் தாமதம் ஆனது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.

மேற்குவங்க மாநில முதல்வர் பயணித்த விமானம் போதிய எரிபொருள் இல்லாமல் தரையிறங்கிய நிகழ்வு தீவிரமானது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். சி.பி.எம். உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் கூறுகையில், இது அரசின்  மற்றும் குறிப்பிட்ட துறையின்  திறன்மையின்மையை காட்டுவதாக உள்ளது என்று விமர்சித்தார். அப்போது அவரது கருத்தை அ.தி.மு.க உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு தேவை

இதே பிரச்சினையயை லோக்சபாவில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி  சுதீப் பந்தோபாத்யாயா எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணம் செய்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்துள்ளது. இதனால்  அந்த விமானம் அவசரமாக தரையிறங்கவேண்டியிருந்தது.  முதல்வர் போன்ற வி.ஐ.பிக்களின் பாதுகாப்பு முக்கியம் என அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி இருந்த விமானம் வானத்தில் 13 நிமிடம் மட்டுமே சுற்றி வந்தது. பின்னர் அது உரிய முறையில் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் குறைந்த அளவில் எரி பொருள் இருப்பதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என விமானப்போக்கு வரத்துத்துறை அமைச்சர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள நக்ரோட்டாவில்  உள்ள ராணுவ யூனிட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு அவையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அவை ஒத்திவைப்பு

லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்த்து எதிர் கட்சி எம்.பிக்கள் கடுமையாக கோஷம் போட்டனர். இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அந்த அவை கூடிய போது  வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் படும் துயரம் குறித்து  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி எழுப்பினார். அது குறித்து அவையில்விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரினார். அ.தி.மு.க உறுப்பினர் வேணுகோபாலும் விவாதம் நடத்த வேண்டும் என்றார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்  பேசும் போது கறுப்பு பணம் பதுக்கி உள்ளவர்கள் தங்களது பணத்தில் 50 சதவீதத்தை வைத்துக்கொள்ளலாம் என்ற அரசின் முடிவால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர் கட்சியினர் குறுக்கீடுகளால் தடை பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்