முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நாடா' புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு- உதயகுமார் தகவல்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடா புயலை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதுவை அருகே உருவாகி உள்ள நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடா புயல், வேதாரண்யம் - கடலூர் இடையே கரை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதன்காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆய்வுக்கூட்டம்

இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையகத்தின் அவசர கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் சந்திர மோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் சி.என்.மகேஷ்வரன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜி.லதா ஆகியோர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, 

தயார் நிலையில் மீட்புக்குழு

நாடா புயலை எதிர்கொள்வதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளோம். அந்த வகையில் நாடா புயலை எதிர்கொள்ள காவல் முறை, மின்சார வாரியம், வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. அதே போன்று மாவட்ட அளவிலும் இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்பவேண்டாம்

மேலும் புயல் தொடர்பாக சமூக வலைத்தளம் உட்பட பிறவற்றின் மூலம் வரும் வதந்தி செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசால் சார்பில் அதிகாரபூர்வமாக அளிக்கப்படும் செய்திகளை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளை அறிந்து அதற்கேற்றார் போல் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். பால் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையினால் பாதிப்பில்லாமல் தங்குதடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து கண்காணிப்பு

மழையின் காரணமாக எந்த இடத்திலும் மனித உயி்ரிழப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, அரசுக்கு வழிகாட்டிதல்களை வழங்கியுள்ளார். அதன்படி அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மழையினால் ஏற்பட்ட அனுபவங்களை கவனத்தில் கொண்டு, நாடா புயலால் அத்தகைய எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். சுரங்க பாதைகள், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நீர் தேங்கினால் அதனை உடனடியாக சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இருப்பு

மேலும் கடந்த ஆண்டு வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் கண்டறிய பட்டு அந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மக்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக மக்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து மக்களை மீட்டு தங்க வைக்க இடம் மற்றும் உணவு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் அரசு அறிவிப்பு வெளியாவதற்குள் எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு சேவை

மேலும் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது செல்போன்கள் இயங்காமல் செயலிழந்து போனது. அது போன்ற நிகழ்வு தற்போது நடைபெறாமல் தடுக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மழையினால் செல்போன் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடா புயலின் அபாயம் இருக்க கூடிய பகுதிகளில் மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளின் கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும் நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு அறிவுறுத்தல்

சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான அளவுக்கு குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும். கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.மழைநீரில் செல்வதாயின், பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கையில் கொம்பு வைத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.மேலும் மின்கம்பங்களிலிருந்து அறுந்த மின்கம்பிகளை பார்க்க நேர்ந்தால், பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு எண்கள்

மாநில அளவில் 1070 என்ற எண்ணுக்கும் மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணுக்கும் இந்த மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். உடனடியா மாவட்ட மற்றும் தாலுக்காக்கலில் இயங்கும் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுப்படும். 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படும். மேலும் புயல் தொடர்பாக ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இந்த மழையினால் மக்கள் எந்த விதமான அச்சமும் அடைய தேவையில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்