முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலுக்கு வந்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

ஆதி அந்தங்கடந்த பரம்பொருளான இறைவனை உலக உயிர்கள் இன்புற்று உய்ய உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமானை அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய சமய குரவர்கள் போற்றி துதித்துள்ளனர். அவ்வாறு மூவராலும் பாடப்பெற்ற ஈடு இணையற்ற திருத்தலங்களில் ஒன்று தான் திருச்சி மாவட்டத்தில் உள்ள (லால்குடி) திருத்தவத்துறை (எ) லால்குடி திருத்தலமாகும். இது திருச்சி-சிதம்பரம் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

திருத்தலம்

திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெருந்திரு பிராட்டியார் பிள்ளைத்தமிழ் என்ற தனிச் சிறப்பான பிள்ளைத்தமிழ் இத்திருக்கோவிலின் அம்பிகை மீது பாடியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போலவே இந்த தலமும், சைவமும், வைணவமும் கலந்த திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் எம்பெருமான் சப்தரிஷீஸ்வரர் மேற்கே பார்த்தும், பெருந்திருபிராட்டியார் கிழக்கே பார்த்தும், திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி மெய்யன்பர்க்கு அருள்மழை பொழிகின்றனர். தில்லை நடராஜர் பெருமானுக்கு இணையாக சிவகாமி உடனுறை ஆனந்த நடராஜ பெருமானுக்கும் திருவாதிரை பெருவிழா காண்பதும் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.
இத்திருக்கோவில் ஊரின் நடுவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலில் நுழைவு வாயிலில் ஐந்து அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே முன்புறம் நாற்கால் மண்டபம் உள்ளது. சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் உள்ளது. கோபுர வாசலில் நுழைந்ததும், வலப்புறத்தில் சிவகங்கை தீர்த்தக்குளமும் இடப்புறத்தில் வசந்த மண்டபமும் உள்ளது.

திருத்தவத்துறை லால்குடியான வரலாறு

அப்பர் சுவாமிகள் அருளிய பண்டெழுவர் “தவத்துறை”  என்ற சொற்றொடரில் உள்ள தவத்துறை என்பதே இத்தருத்தலத்திற்கு பெயராக முன்னோர்களால் மொழியப்பட்டது. பின்னே வந்த சான்றோர்களால் ‘திரு’ சேர்க்கப்பட்டு திருத்தவத்துறை என்றே பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் வரலாற்றுக்கீறல் காரணமாக திருத்தவத்துறை என்று திருநாமம் வலுவிழந்து விட்டது.

மாலிக்காஃபூர் மன்னர்

மாலிக்காஃபூர் மன்னர் தமிழகத்தில் படையெடுத்தபோது திருத்தவத்துறையை நெருங்கிய நேரத்தில் தூரத்தே இருந்து ஒரு கோபுரத்தை காண நேர்ந்தது. அச்சமயம் சப்தரீஷீஸ்வரர் திருக்கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு வேலைகள் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாலிக்காஃபூரின் கண்களுக்கு சிவப்பு கோபுரமாகத் தெரிந்திருக்கிறது.

உடனே அருகில் இருந்தவர்களிடம் அது என்ன லால்குடி- என்று உருது சொற்றொடரை உச்சரித்துக கேட்டிருக்கிறார். ‘லால்’ என்றால் சிவப்பு என்றும், ‘குடி’ என்றால் கோபுரம் என்றும் பொருள். அவர் அவ்வாறு வினவிய அச்சொற்றொடரே இன்றளவும் நின்று கால கட்டத்தில் திருத்தவத்துறை என்றால் பலருக்குத் தெரியாது. ஆனால் தமிழக அறநிலையத்துறை ஆவணங்களில் ‘திருத்தவத்துறை’ என்றும் பெயர் இன்றளவும் இடம் பெற்று வருகிறது. அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் கோவில் என்றும் பெயர் வந்தது.

தோஷங்கள் நீங்கும்

சப்தரிஷிகளின் நேர்வழி வந்த கிரகங்கள்-3 (சந்திரன், குரு, சுக்கிரன்) இரண்டாம் தலைமுறை கிரகங்கள்-2 (சூரியன், புதன்) மூன்றாம் தலைமுறை கிரகங்கள்-3 (சனி, ராகு, கேது) தலைமுறைக்கு பின் வந்த கிரகம்-1 (செவ்வாய்)
எனவே நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள், தோஷங்கள் அனைத்தும் சப்தரிஷிகளால் வணங்கப்பெற்று அவர்கள் தன்னுள் ஆட்கொண்ட இத்தலத்து எம்பெருமான் ஸ்ரீசப்தரிஷீஸ்வரரை தொழுதால் நீங்கும். இத்தலத்து நவக்கிரகங்கள் வைத்தீக பிரதிஷ்டை ஆகம பிரதிஷ்டை மற்றும் சமப்பிரதிஷ்டைக்கும் உட்படாமல் தனித்துவமாக அனைத்தும் சூரியனை நோக்கி அக்தர் மண்டபத்தில் அமைந்துள்ளதால் நவக்கிரக தோஷங்கள் இங்கு வழிபட நீங்கும்.

ஸ்ரீ நடராஜபெருமான் மகாஅபிஷேகம்

இத்திருக்கோவிலின் திருவாதிரை பெருவிழா ஆண்டுதோறும் 10 தினங்கள் மிக சிறப்பாக நடைபெறும். திருவிழாவில் முக்கியமானது திருவாதிரைப் பெருவிழா. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் அலங்காரத்துடன் நாள்தோறும் நடன மண்டபத்தில் இறைவன் நடனகாட்சி நடைபெறும். திருவாதிரை நன்னாளுக்கு முன் இரவு நடராசப் பெருமானுக்கு மிகப்பெரிய அளவில் மங்கல இசையுடன் திருமுழுக்காட்டு (மகாபிஷேகம்) 108 வாசனை திரவியங்களுடன் நடைபெறும். சிதம்பரத்திற்கு அடுத்து திருத்தவத்துறை (எ) லால்குடியில் தான் திருவாதிரை வெகுசிறப்பாக நடைபெறும்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த மகாஅபிஷேக விழாவில் கலந்து கொண்டு நடராஜபெருமானின் அபிஷேகத்தையும், ஆனந்த நடனத்தையும் கண்டு களிப்பார்கள். மறுநாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது தீபாராதனையும், மாலை ஆனந்த தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெறும், மறுநாள் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்