முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் மீண்டும் தொடங்கியது : பெட்ரோல் நிலையங்களில் சில்லரை தட்டுப்பாடு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

சென்னை - தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து என்ற மத்திய அரசின் கெடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் நிலையங்கள், விமான டிக்கெட் விற்பனை மையங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே பெறப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். பணத்தட்டுப்பாடு : பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த போதிலும், பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்வைப் இயந்திரங்கள் : இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வகையில், சுங்கச் சாவடிகளில் 2-ம் தேதி வரை சுங்க வரிக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. வாகனங்களுக்கான இந்த சுங்கவரிக் கட்டண ரத்து, நிறைவடைந்ததை அடுத்து, சுங்கச்சாவடிகளில் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் 15-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 3 ஆயிரத்து 800 சுங்க சாவடிகளில், ஸ்வைப் இயந்திரங்கள் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் சுங்க கட்டணத்தை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி: இதேபோல், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் விமான டிக்கெட் விற்பனை மையங்களில் வரும் 15ம் தேதி வரை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்த கால அவகாசம் குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என புதிதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பெட்ரோல் நிலையங்கள் மற்றும் விமான டிக்கெட் விற்பனை மையங்களில் நேற்று முதல் புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே பெறப்படுவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே, புதிய ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்திற்கு வராத நிலையில், இந்த அறிவிப்பால் கடும் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி, ரயில்வே டிக்கெட் கட்டணத்திற்கு, வரும் 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்