முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணம் மீட்கப்படாததால் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மம்தா

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ரூபாய் நோட்டு விவகாரத்தில் கருப்பு பணம் மீட்கப்படாததால் பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

பொதுமக்கள் அவதி

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து கடந்த 1 மாதமாக வங்கியில் பணம் எடுக்க செல்லும் சாதாரண மக்கள் அலைக் கழிப்புக்கும், மிகுந்த வேதனைக்கும் ஆளாக் கப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டு வாபஸ் செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் இன்னல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்.

விளக்கம் அளிக்க வேண்டும்

இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி தற்போதைய நிலை குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களது பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக உரிமை இல்லை. பிரதமர் மோடியின் நடவடிக்கையால் கருப்பு பணம் மீட்கப்படவில்லை. ஆனால் சாதாரண மக்கள் நல்ல வழியில் சேர்த்து வைத்திருந்த பணம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.

பொருளாதாரம் முடங்கியது

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றச் சென்ற போதும், பணம் எடுக்க சென்ற போதும் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. விவசாயம், வியாபாரம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது அவரது சர்வாதிகாரத்தை காட்டுகிறது. இந்த நடவடிக்கையால் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

பொதுமக்கள் அனைவரும் உதவியின்றி தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒருவேளை நான் பிரதமராக பதவி வகித்திருந்தால் பொதுமக்களிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருப்பேன். கருப்பு பணம் மீட்கப்படாததால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த சோதனை காலம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. எந்தவித தடங்களும் இன்றி பணத்தை மக்கள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்