முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் நுழைவுத்தேர்வை தமிழில் எழுதலாம் : சுகாதாரத்துறை இணை அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -  மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்மாக அளித்த பதிலில் தெரிவித்தார்.  பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தற்போது நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு குறித்து எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசின் முடிவால் ஏழை , நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

 இது தொடர்பாக பாராளுமன்றம் கடந்த 3 வாரமாக எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது.  இந்த நிலையில் பாராளுமன்றத்தில் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்,  நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் முது நிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு  நீட் எனப்படும்  தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சி.பி.எஸ்சி பாடத்திட்டத்தில்  படித்தவர்கள் மட்டுமே எழுதும் வகையில் நீட் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் இது மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு மாநிலங்கள் இந்த நீட் தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டு வந்ததால், மாநில மொழியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை இருந்தது.

 இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வினை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் லோக்சபாவில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது,  இந்திய மருத்துவக்கவுன்சில் சட்டம் 1956பிரிவு 10(டி) ன்படி பொதுத்தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் நடத்த வேண்டும் . மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து 2017ம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி,  மராத்தி, தெலுங்கில் நடத்தப்படும். இந்த மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மருத்துவ  படிப்பில் இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீட் தேர்வால் மாநிலங்கள் இட ஒதுக்கீடு கொள்கை பாதிக்கப்படாது. இவ்வாறு மத்திய அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்