முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான முன்னாள் விமானப்படை தளபதி தியாகி சி,.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டார்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - இந்தியாவில் வி.வி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்காக பிரிட்டனின் அகஸ்டா வெஸ்டா லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பெறப்பட்ட ரூ423 கோடி லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி சி.பி.ஐ.காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.  பிரிட்டனில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் இத்தாலியில் இருக்கிறது. அகஸ்டா வெஸ்ட் லேண்ட் தனது தயாரிப்பான ஹெலிகாப்டர்களை விற்பதற்கு இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளுடன் பேரம் நடத்தியுள்ளது. இந்த நிலையில்  வி.வி.ஐ.பிக்கள் பயணம் செய்ய அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய விமானப்படை மூலம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் போது அகஸ்டா நிறுவன ஹெலிகாப்டர்களை வாங்க முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி ஹெலிகாப்டர் பறக்கும் உயர நிலையை 6ஆயிரம் மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 500  மீட்டராக குறைத்தார் என்றும் இதனால் அகஸ்டா நிறுவனம் தனது ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு எளிதாக விற்க முடிந்தது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இந்த திருத்தங்களை மேற்கொண்டு முன்னாள் விமானப்படை தளபதி தியாகி  ஊழல் திட்டத்தில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

இந்தியாவுடன் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனம் ஹெலிகாப்டரை சப்ளை செய்ய ரூ3600 கோடி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த மிகப்பெரும் தொகை கொண்ட ஒப்பந்தத்தை  பெறுவதற்காக பிரிட்டன் நிறுவனம் அகஸ்டா ரூ423 கோடி வரை இந்தியாவின் உயர்  அதிகாரிகளுக்கு இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் அளித்துள்ளது. இந்த லஞ்ச விவகாரம் அகஸ்டாவின் தாய் நிறுவனமான இத்தாலியின் பின்மெக்கானிக்கா வழக்கு விசாரணையின் போது தெரிய வந்தது. அதி நவீன ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பெரும் அளவில் லஞ்சம் தரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது.

இந்த லஞ்ச ஊழல் தொடர்பாக  சி.பி.ஐ . வழக்கு பதிவு விசாரணை செய்கிறது. இதில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்  சஞ்சய் தியாகி மற்றும் வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. அவர்களை வருகிற 14ம் தேதி வரை சி.பி.ஐ போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகியோரை டிசம்பர் 14ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்.

இந்த ஊழல் விவகாரம் மிக தீவிரமான விஷயம் என்பதால்,நியாயமான முறையில் விசாரணை இருக்க வேண்டும் என இந்த போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது என    நீதிமன்ற  மாஜிஸ்திரேட்  சுர்ஜித் சவுரப் கூறினார்.  குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வழக்கறிஞர்கள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் என்ற சி.பி.ஐயின் கோரிக்கையை எதிர்த்தனர்.இருப்பினும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்