முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய ரூபாய் செல்லாது என்ற முடிவு ,ஏழைகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: கேரள முதல்வர்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 போபால்  -  பழைய ரூபாய் 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழைகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்  என்று கேரள மாநில இடது சாரி கூட்டணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். போபாலில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.  நாட்டில் உள்ள கறுப்புப்பணம், கள்ள நோட்டு , வரி ஏய்ப்பு , தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்தல் போன்றவற்றை முற்றிலும் ஒடுக்குவதற்காக,பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வங்கிகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு அதற்கு பதிலாக அரசு வெளியிட்டுள்ள புதிய ரூ2ஆயிரம் மற்றும் புதிய ரூ500 நோட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

நடுத்தர, ஏழை மக்கள் தங்களது பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நாடு முழுவதும் நாள் கணக்கில் குவிந்துள்ளனர். அவர்கள் கடும் வெயிலில்  பல மணி நேரம் வரிசையில் நிற்கும் போது ஏறக்குறைய 100 பேர் மயக்கமடைந்து உயிரிழந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அப்பாவி நடுத்தர , ஏழை மக்களை அல்லல்படுத்தும் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கேரளாவில்  ஆட்சி செய்யும் இடது சாரி கூட்டணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் நேற்று மத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்தார்.மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பின் அகில இந்திய மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கேரள மாநில முதல்வரும்  இடது கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம்மின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழைகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் .

இது எமர்ஜென்சியை விட பயங்கரமானதாக உள்ளது. இது ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கும். ஏழைகள் மீது இது போன்று நடத்தப்பட்ட தாக்குதலை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. கறுப்பு பணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என கூறப்படுகிறது. ஆனால் ஏழைகள் மீதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.இவ்வாறு அவர்  மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த மாநாட்டில் நேற்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்