நாடு முழுவதும் வங்கிகளில் ரூ12.44 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016      வர்த்தகம்
Reserve-Bank 2016 12 04

மும்பை, பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததைத்தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதத்தில் வங்கிகளில்  ரூ12.44லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு,  ஊழல் ஆகியவற்றை முற்றிலும் அழிக்க பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பழைய ரூ500 , ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை பெறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ12.44லட்சம் கோடி பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று நாட்டின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்  ஆர். காந்தி கூறுகையில், மக்கள் தங்கள் வசம் உள்ள பணத்தை தாராளமாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் அந்த பணத்தை தங்களிடமே வைப்பதை தவிர்ப்பது நல்லது என்றார்.


 ரிசர்வ் வங்கி தகவல் படி, கடந்த நவம்பர் 8-9ம்தேதி முதல் இதுவரை நாட்டில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மற்றும் வங்கி கிளைகள் மூலமாக ரூ 4.61 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்த பின்னர் ரிசர்வ் வங்கி இதுவரை 2100 கோடி நோட்டுகளை பல்வேறு ரூபாய் மதிப்புகளில் விநியோகித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் காந்தி தெரிவித்தார்.

 பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம்தேதியன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள மக்கள் தங்கள் வசம் உள்ள இந்த பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன் பின்னர் பழைய ரூ500 நோட்டுகள், ரூ1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலேயே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 அரசின் இந்த அறிவிப்பால்  நாட்டில் உள்ள வங்கிகளில் 37 நாட்களில் ரூ12.44லட்சம் கோடி பழைய ரூ500, ரூ1000நோட்டுகளாக டெபாசிட் ஆகியுள்ளன.

 பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை மக்கள் மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் நிற்கும் போது ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்தனர். அப்பாவி, நடுத்தர, ஏழை மக்கள் அரசின் முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே அரசு ரூபாய் நோட்டு விவகாரத்தில் எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ்  அரசை தீவிரமாக எதிர்க்க துவங்கியுள்ளது.   கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பவர்கள்தான் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். எங்கள் முடிவை நாட்டின் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கிறார்கள் என பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஆகியோர் கூறியுள்ளனர். மக்கள் தற்போது சிரமப்படுவடுவதை பார்க்கிறேன். ஆனால்  கறுப்புபணம், ஊழல் ஆகியவற்றில் இருந்து தூய்மை அடைவதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: